அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியின் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அம்பாறை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வைத்தியர் அவர் பணிபுரியும் கண் சிகிச்சை பிரிவுக்கு திட்டமிட்டபடி வராததால், அங்குள்ளவர்கள் அவரது தொலைபேசிக்கு பலமுறை அழைத்தனர்.
எந்த பதிலும் வராததால், மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் இல்லத்திற்கு சென்றார். வீட்டுக்குச் சென்று வைத்தியரிரை அழைத்தும், எந்த பதிலும் வராததால் மீண்டும் வைத்தியசாலைக்கு சென்று பொலிஸாருக்கு அறிவித்து வீட்டு உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.
பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டுக்குள் நுழைந்த போது, படுக்கையில் அசைவற்று காணப்பட்டுள்ளார். உடனடியாக நோயாளர் காவு வண்டியில் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்திருந்ததாக அம்பாறை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.



