யாழ் நகரில் 13 வயதான மாணவனின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய 4 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதான நால்வரும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் நகரிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்களே தாக்குதல் நடத்தினர். தனியார் கல்வி நிலையத்தின் முன்பாக இந்த தாக்குதல் நடந்தது.
15, 16 வயதானவர்களே கைதாகியுள்ளனர். கைதான 4 பேருக்கு மேலதிகமாக, கொக்குவில் பகுதியை சேர்ந்த மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளனர். கைதான மாணவர்களில் சிலரது பெற்றோர் யாழ் நகரிலுள்ள முன்னணி வர்த்தகர்கள்.
இதனால், முன்னணி சட்டத்தரணிகள் பலர் இன்று மாணவர்களிற்காக முன்னிலையாகினர். எனினும், யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் பிணை கோரிக்கையை நிராகரித்து, நாளை (13) வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தாக்கப்பட்ட மாணவன், தான் ஏன் தாக்கப்பட்டேன் என்பதையே அறிந்திருக்கவில்லை. ஆள் மாறாட்டமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. காதல் விவகாரத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் ஆராயப்படுகிறது.