தரமற்ற தடுப்பூசிகளை இலங்கைக்குள் கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த வழக்குடன் தொடர்புடைய ஒரு ‘சிறிய மீனை’ குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திள்ளது என்றும், இந்த விவகாரத்தில் இன்னும் ‘பெரிய மீன்கள்’ சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியாவில் இருந்து இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் நிறுவனத்தின் உரிமையாளர் அருண தீப்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தனது வாடிக்கையாளர் ஒரு அப்பாவியாக பலியானதாக தெரிவித்த சட்டத்தரணி திருமதி சாந்தனி தயாரத்ன, அவசரகால கொள்வனவுகளின் கீழ் இந்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியவர்கள் அனைவரும் இந்த குற்றத்திற்கு பொறுப்பாளிகள் என தெரிவித்தார். “ஊடகங்களில் காட்டப்படுவதை விட இதில் அதிகமானவை உள்ளன, மேலும் இந்த குற்றத்தில் தொடர்புடைய உயர்மட்ட நபர்கள் யாரும் இதுவரை அம்பலப்படுத்தப்படவில்லை,” என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
சந்தேக நபருக்கான பிணையை நிராகரித்த நீதவான், இந்தக் குற்றத்தையும் அதனுடன் தொடர்புடைய நபர்களையும் வெளிப்படுத்த வேண்டுமாயின் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொள்முதல் நடவடிக்கையின்றி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கலுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளையும் அவர்களது நிலை என்னவாக இருந்தாலும் கைது செய்யுமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
அதிகாரியின் தரத்தைப் பொருட்படுத்தாமல் இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்ட நீதவான், இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுமாறும், சட்டமா அதிபரின் பிரதிநிதித்துவத்தை சமர்ப்பிக்குமாறும் சிஐடிக்கு உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும் வரை, பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான தடுப்பூசிகளின் இருப்புக்களை நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் சேமிக்குமாறு நீதவான், சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த தடுப்பூசிகளை தயாரித்த சந்தேக நபருக்கு சொந்தமான சீதுவை உற்பத்தி ஆலைக்கு சீல் வைத்தமைக்கான காரணங்கள் உள்ளடங்கிய அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும் மருத்துவ வழங்கல் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.