26 C
Jaffna
December 9, 2024
Pagetamil
இலங்கை

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணிக் கார்த்திகையில் மரம் நடுவோம்

இயற்கையைக் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று வகுத்து இயல்பாகவே இயற்கையோடு இசைந்த வாழ்வியலைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். நெருக்கடிகள் மிகுந்த போர்ச் சூழலிற்கூட இயற்கை எனது நண்பன் என்று சொல்லி எமது சூழலைப் பேணி பாதுகாத்த மரபினர் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்பாட்டு மரபே காலநிலை மாற்றங்களின் கடுமையான விளைவுகளில் இருந்தும் எம்மைக் காப்பாற்றும். அந்த வகையில் மாவீரர்களைப் போற்றும் இக்கார்த்திகை மாதத்தில் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணி அவர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாக வடக்கு மாகாண சபையால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலநிலை மாற்றம் மிக மோசமாகத் தனது தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த பூகோளச் சராசரி வெப்பநிலையைக் கொண்ட மாதமாக இந்த ஆண்டின் யூலை மாதம் பதிவாகியுள்ளது. காட்டுத்தீயும் வெப்ப அலைகளும் முன்னெப்போதையும்விட மூர்க்கம் கொண்டு பொசுக்கி வருகிறது. இந்த ஆண்டில் கனடாவில் மட்டும் காட்டுத்தீ ஒன்றரை இலட்சம் சதுரக் கிலோ மீற்றர்களுக்கும் அதிகமான காட்டுப் பரப்பை சாம்பலாக்கியிருக்கிறது. கடந்த கோடையில் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைகள் 61,000க்கும் அதிகமான மக்களைப் பலியெடுத்திருக்கிறது. இன்னொருபுறம், இந்த ஆண்டு லிபியாவில் கடும்மழை கொட்டித்தீர்த்ததில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதோடு பத்தாயிரத்துக்கும் மேலானோர் காணாமல் போயுள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்குதல்களுக்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. பூமி சூடாகுவதால் துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருகி வருவதன் காரணமாக உயர்ந்து வரும் கடலால் இலங்கையின் கரையோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வால் யாழ் குடாநாடு ஆனையிறவுப்பகுதியில் கடலால் துண்டிக்கப்பட்டுத் தனித் தீவாக உருவாகும் என் எதிர்வு கூறப்பட்டுள்ளது. உலகம் இன்று அனுபவிக்கத் தொடங்கியுள்ள இந்த அனர்த்தங்களுக்குக் கரிக்காற்றை உறிஞ்சுகின்ற காடுகளை அளவுகணக்கில்லாமல் கபளீகரம் செய்துவருவதே அடிப்படைக் காரணமாகும். நாமும் யுத்தம் தின்றது போக எஞ்சியிருக்கும் காடுகளையும் அபிவிருத்தியின் பெயரால் அழிக்கத் தலைப்பட்டிருக்கிறோம். தமிழின் அடையாளமான பனை மரங்களைக்கூட நாம் விட்டுவைப்பதாக இல்லை.

பூமி வெப்பமடைதல் வெறுமனே காலநிலை மாற்றத்துடன் அடங்கிப் போய்விடும் ஒன்று அல்ல இதன் எதிர்விளைவுகளாகக் கடும் வரட்சி ஏற்பட்டுக் குடிநீருக்காக நெடுந்தொலைவு அலைய வேண்டி ஏற்படும். பயிர்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். கால்நடை வளர்ப்பைக் கைவிடவேண்டி ஏற்படும். வளியில் மாசுகள் அதிகரித்துச் சுவாசநோய்களால் அல்லாட வேண்டி ஏற்படும். மனஅழுத்தம் உருவாகித் தற்கொலை உணர்வு தூண்டப்படும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே போரின் கொடிய வலிகளைச் சுமந்து நிற்கும் ஈழத்தமிழினம் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கு இப்போதிருந்தே பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் கற்பனைக்கும் எட்டாத் தாங்கொணாத் துயரங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதால் விபரீதமா?: அல்லைப்பிட்டியில் பெண்களுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

பேரன் பகிடியாக தள்ளியதால் 91 வயது மூதாட்டி உயிரிழப்பு: யாழில் சம்பவம்!

Pagetamil

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜெ. எஸ் அருள்ராஜ்

east pagetamil

கிளாலி மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கான நடமாடும் சேவை

Pagetamil

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment