தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாகி திலீபன் நினைவேந்தலை, அரசியலமைப்பை மீறி ஏற்பாடு செய்ததாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், வழக்கின் 6 அரசு தரப்பு சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
முந்தைய சந்தர்ப்பத்தில், எம்.கே.சிவாஜலிங்கத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்ததுடன், குற்றப்பத்திரிகையை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, அவர் தலா ரூ.1 மில்லியன் பெறுமதியான இரண்டு காசுப் பிணையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.
2020 செப்டெம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் கோண்டாவில் கோகுல வீதியில் இராசையா பார்த்தீபன் என்ற தியாகி திலீபனின் 33வது நினைவு தினத்தை ஏற்பாடு செய்ததன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக 2022 பெப்ரவரி 24 அன்று சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை அரசியலமைப்பின் 44 (2) வது சரத்தின் படி, அரசியலமைப்பை மீறியமை மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்ததுடன், குறித்த அழைப்பாணையின் பிரகாரம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிடியாணையை பெற்றுக்கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர் ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.பிடியாணை பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதியில் சிவாஜிலிங்கம் சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்தமை தொடர்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிடியாணை வாபஸ் பெறப்பட்டது. .
பதாகைகள், மெழுகுவர்த்திகள், வாழைத்தண்டுகள் போன்ற சாட்சிப் பொருட்களுடன் யாழ்.நீதிமன்றத்தின் வழக்கு அறிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் பெயர்களும் சாட்சியங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளன.