ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுடன் சமூகத்தின் தேவைக்கேற்ப தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியசாத் டெப் தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஒக்டோபர் 16ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
சுந்தரம் அருமைநாயகம், சேனநாயக்க அலிசந்தராலகே, நளின் ஜயந்த அபேசேகர, ராஜித நவீன் சேனாரத்ன, அஹமட் மொஹமட் சலீம், சாகரிகா தெல்கொட, நிமல்கா பெர்னாண்டோ, தீபானி ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் ஒற்றை முறையுடன் கூடிய பொருத்தமான தேர்தல் முறையைத் தயாரித்தல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்களிப்பது, வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்த தனியொருவருக்கு இடம் வழங்குதல், அரச சார்பற்ற ஊழியர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமையை வழங்குதல் ஆகியன ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட வேண்டிய பணிகளாகும்.
ஆறு மாதங்களுக்குள் விசாரணைகளை நடத்தி அறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் சமர்பிப்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.