ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, முழு அமர்வு முன் விசாரணைக்கு எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இது தொடர்பான மனு இன்று எஸ்.துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இது பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி உதித இகலஹேவ தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்களின் வெளியேற்றம் தொடர்பில் உயர் நீதிமன்றம் இருவேறு சர்ச்சைக்குரிய தீர்மானங்களை வழங்கியிருக்கும் பின்னணியில் இந்த மனுவை முழு பெஞ்ச் முன்னிலையில் பரிசீலிப்பது பொருத்தமானது என டயானாவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரினார்.
இதனடிப்படையில், இந்த மனுவை முழு அமர்வு முன்னிலையில் விசாரிக்குமாறு கோரி பிரதம நீதியரசரிடம் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைஸ் முஸ்தபா மற்றும் ஃபர்மான் காசிம் ஆகியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எனினும், இது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு கால அவகாசம் அளித்த உயர் நீதிமன்றம், மனு மீதான விசாரணையை நவம்பர் 27ஆம் திகதி நடத்த உத்தரவிட்டது.
அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர், கட்சியின் ஒழுக்கத்தை மீறியதாக அமைச்சர் டயானா கமகேவின் கட்சி உறுப்புரிமையை பறிக்கும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டிருந்தது.
இந்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், எனவே அதனை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் கோரி அமைச்சர் டயானா கமகே இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.