சந்தேகநபர் ஒருவரின் பயணத்தடை நீக்கப்பட்டதாக போலி கடிதம் தயாரித்து தொலைநகல் மூலம் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளரை கைது செய்துள்ளது.
இந்த சந்தேக நபருக்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்திற்குரிய பதிவாளர் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு இந்த போலி கடிதத்தை வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான ஆவணம் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன், காணாமல் போன வழக்கு பதிவு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த போலி கடிதத்தை தட்டச்சு செய்த பெண் உத்தியோகத்தரிடம் சி.ஐ.டி.வினர் விரிவாக விசாரணை நடத்தினர். தட்டச்சு செய்ய பதிவாளரிடம் இருந்து கடிதத்தின் வரைவோலை பெற்றதாக தட்டச்சர் புலனாய்வாளர்களிடம் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், பதிவாளரிடம் இருந்து அது தொடர்பான வழக்கு ஆவணம் தனக்கு கிடைக்கவில்லை என அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குக் கோப்புகள் வைக்கப்பட்டுள்ள அறையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு சந்தேகத்தின் பேரில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.