முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா மனஅழுத்தம், உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ் தேசிய கட்சிகள் அடுத்த வாரம் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.
இன்று (6) யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் கட்சிகள், அடுத்த வாரத்தில் ஒரு நாளில் போராட்டத்தை அறிவிப்பதாக கூட்டாக தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாண வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட வர்த்தகர் சங்கங்கள், பொதுஅமைப்புக்களுடன் கலந்துரையாடிய பின்னர் கதவடைப்பு திகதி பற்றிய இறுதி திகதியை அறிவிப்பதாக, இன்றைய சந்திப்பின் முடிவில் தமிழ் கட்சிகள் தரப்பில் ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்திருந்தார்.
எனினும், எதிர்வரும் 13ஆம் திகதி கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கான முன்னாயத்தங்களே நடந்து வருவதாக, சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவியதாக இந்த போராட்டம் நடத்தப்படும்.
13ஆம் திகதி கதவடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய பிரதான முஸ்லிம் கட்சிகள் கொள்கையடிப்படையில் இணக்கம் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கத்தினருடன் நாளை காலை 11 மணிக்கு கலந்துரையாடல் நடக்கும்.
அதை தொடர்ந்து ஏனைய தரப்பினருடன் சந்திப்புக்கள் நடக்கும். திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தந்தை செல்வா அரங்கில் பொதுஅமைப்புக்களுடன் கலந்துரையாடல் நடக்கும். 13ஆம் திகதி கதவடைப்பு போராட்டத்தை நடத்த அனைத்து தரப்பினரும் உடன்பட்டால், திட்டமிட்டபடி கதவடைப்பு நடைபெறும்.
ரெலோ தனியாக முடிவெடுக்கும்
இன்றைய சந்திப்பில் ரெலோ சார்பில் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஸ் கலந்து கொண்டார். முடிவெடுக்கவல்ல மூத்த தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. தலைமையினால் அறிவுறுத்தப்பட்டிருந்த 3 விடயங்களை இன்று நிரோஸ் தெரிவித்தார்.
அனைத்து தரப்புக்களுடனும் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும், கதவடைப்பு பற்றி கட்சிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்பவை அவற்றில் முக்கியமானவை. அடுத்த வாரம் கதவடைப்பு என இன்று அறிவித்தல் விடுத்த சமயத்தில் ரெலோ பிரதிநிதியும் அங்கிருந்தார்.
இன்றைய கூட்டத்தின் பின்னர் தமிழ்பக்கத்திடம் பேசிய ரெலோ பிரமுகர் ஒருவர், கதவடைப்பு போராட்டம் நடத்துவது பற்றி தமது கட்சி கூடி முடிவெடுக்கும் என்றார்.
சர்வஜன வாக்கெடுப்பை வலியுறுத்தவோம்
இதேவேளை, கதவடைப்பு தொடர்பில் நாளை முதல் வர்த்தகர் சங்கங்கள், பொதுஅமைப்புக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கவுள்ளது. இந்த கலந்துரையாடல்களில் தனியே சரவணராஜா விவகாரத்தை மட்டும் குறிப்பிடாமல், தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுக்கு சர்வதேசம் தலையிட வேண்டும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாக பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
பொதுஅமைப்புக்களுடன் திங்கள்கிழமை சந்திப்பு நடக்கும்.
அத்துடன், நாளை சந்திப்பில் தமது தரப்பிலும் சில அழுத்தம் திருத்தமான நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளதாக வர்த்தர் சங்க வட்டாரங்களும் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.




