அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மொஹாலியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிபட்சமாக டேவிட் வோர்னர் 53 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். ஜோஷ் இங்லிஸ் 45, ஸ்டீவ் ஸ்மித் 41, மார்னஷ் லபுஷேன் 39, கேமரூன் கிரீன் 31, மார்கஸ் ஸ்டாயினிஸ் 29, பாட் கம்மின்ஸ் 21, மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
277 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 71 ரன்களும், ஷுப்மன் கில் 63 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 74 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில், 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 50 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் ஐயர் 3, இஷான் கிஷன் 18 ரன்களில் வெளியேறினர்.
கப்டன் கே.எல்.ராகுல் 63 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 58 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 3 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
2வது ஆட்டம் நாளை (24) இந்தூரில் நடைபெறுகிறது.