திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை 2022 (2023) முடிவுகளின்படி, மொத்தப் பரீட்சார்த்திகளில், 9,904 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் A பெறுபேறு பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 27,158 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் (F) தோல்வியடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு 2022 (2023) உயர்தரப் பரீட்சைக்கு 263,933 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அவர்களில் 9,904 மாணவர்கள் 3A பெறுபேறு பெற்றுள்ளனர். 3A பெறுபேறு பெற்றவர்களின் சதவீதம் 3.75 ஆகவும், மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த (F) மாணவர்களின் சதவீதம் 10.29 ஆகவும் உள்ளது.
பரீட்சைகள் திணைக்கள புள்ளிவிபரங்களின்படி, உயிரியல் விஞ்ஞான பாடத்தில் 40,329 மாணவர்கள் பரீட்சையை எதிர்கொண்டதுடன் அவர்களில் 23,178 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பௌதீக விஞ்ஞான பாடத்தில் 35,197 மாணவர்கள் பரீட்சையை எதிர்கொண்டதோடு அவர்களில் 20,138 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் மொத்தம் 59,114 மாணவர்கள் பரீட்சையை எதிர்கொண்டதுடன் அவர்களில் 40,140 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை கலைப் பிரிவில் 99,363 மாணவர்கள் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளதுடன் அவர்களில் 64,333 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் 16,051 மாணவர்கள் பரீட்சையை எதிர்கொண்டதுடன் அவர்களில் 10,633 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவில் மொத்தம் 8,082 மாணவர்கள் தேர்வை எதிர்கொண்டதுடன் அவர்களில் 5,981 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
3A பெறுபேறு பெற்ற 9,904 மாணவர்களில், 4,198 மாணவர்கள் வணிகப் பிரிவில் இருந்தும், 3,622 மாணவர்கள் கலைப் பிரிவில் இருந்தும் பதிவாகியுள்ளனர். உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான 3A பெறுபேறு பதிவாகியுள்ளன. அதில் 73 மாணவர்களே 3A பெறுபேறு பெற்றனர்.