மதுரையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தண்டவாளத்தில் நின்றிருந்த சுற்றுலா ரயில் தீ விபத்தில் சிக்கியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 8 பேரின் அடையாளம் தெரிந்தது. இன்னும் இருவரின் அடையாளம் காண இயலவில்லை.
இன்று (26) அதிகாலை மதுரை ரயில் நிலையம் அருகே, கொல்லம் – புனலூர் விரைவு ரயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட IRCTC சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகள் மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டன. அப்போது மணி சரியாக 3.47.
ஓகஸ்ட் 17 ஆம் திகதி லக்னோவில் இருந்து IRCTC ஆன்மிகச் சுற்றுலா ரயிலில் புறப்பட்ட பயணிகள் பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரை வந்தடைந்திருந்தனர்.
பயணச் சோர்வில் பெட்டியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்து இருந்தனர்.
பயணி ஒருவர் ஸ்டவ்வைப் பற்ற வைத்து டீ தயாரிக்க, தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. தீயைக் கண்ட வெளியில் இருந்த பயணிகள் சத்தமிட, உள்ளே இருந்த பயணிகள் அவசர கதியில் தீயை அணைக்காமலேயே கீழே இறங்கியுள்ளனர். இதனால், அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதில் ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் கீழே இறங்க இயலாமல் பலியாகினர்.
விரைந்து வந்த மதுரை டவுன் தீயணைப்புத் துறையினரும், பொது மக்களும் இணைந்து தீயை அணைத்தனர், எரிந்த நிலையில் 9 சடலங்களை மீட்கப்பட்டன. அதில் 5 ஆண்கள், 3 பெண்கள், அடையாளம் தெரியாத சடலம் 1. பின்னர் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 10 ஆக அதிகரித்தது.
உயிரிழந்தவர்கள் விவரம்:
1) பரமேஸ்வர் குமார் (வயது 55)
2) மிதிலேஷ் குமாரி (வயது 62)
3) சந்திரமான் சிங் (வயது 65)
4) ஹேமானி பன்சால் (வயது 22)
5) சாந்தி தேவி வர்மா (வயது 57)
6) அங்கூர் கஷ்யம் (வயது 36)
7) மனோரமா அகர்வால் (வயது 82)
மருத்துவமனையில் இறந்தவர் ஹரிஷ் ஷர்மா (24)
சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீஸ் மற்றும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் & வருவாய்த் துறையினர், போலீஸ் கமிஷனர் வந்து நேரில் ஆய்வு செய்தனர்.
அமைச்சர் பி.மூர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து விவரங்களைக் கேட்டு அறிந்தார்.
பின்னர் விபத்துப் பகுதியில் ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் மாதிரிகளை சேகரித்தனர்.
மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏற்கெனவே தெற்கு ரயில்வே சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்துக்கு பயணிகள் சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற சமையல் எரிவாயு சிலிண்டர் தான் காரணம் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
உ.பி அதிகாரி வெளியிட்ட தகவல்
லக்னோ பிரிவு ரயில்வே பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், “லக்னோ சந்திப்பில் இருந்து ஓகஸ்ட் 17 அன்று சம்பந்தப்பட்ட பெட்டி புறப்பட்டபோது அதில் சிலிண்டர் போன்ற தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருக்கவில்லை. 63 பயணிகள் அந்தப் பெட்டியில் இருந்தனர். எங்களது குழுவினர் எப்போதுமே ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாகக் கண்காணிப்பார்கள். அப்படி ஏதும் இருந்திருந்தால் நிச்சயம் கைப்பற்றப்பட்டிருக்கும்.
இந்நிலையில், ரயிலில் சிலிண்டரில் இருந்து பரவிய தீ பிடித்தே விபத்து நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதனை ஒட்டி நாங்கள் ஓகஸ்ட் 17 ஆம் திகதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் சம்பந்தப்பட்ட குழுவினர் சிலிண்டர் எடுத்துச் சென்றதற்கான சாட்சி ஏதுமில்லை. அப்படியிருக்க, அந்த சிலிண்டர் எப்படி ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.