யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய திருவிழாவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உணவகத்தில் உணவருந்தி விட்டு, பணம் தராமல் சென்றதாகவும், பணத்தை கேட்டபோது தாக்குதல் நடத்தியதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
இன்று (23) இந்த சம்பவம் நடந்தது.
திருவிழா தொடங்கிய பின்னர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது உணவகத்தில் உணவருந்தி விட்டு பணம் தராமல் செல்வதாகவும், தொடர்ந்து அதை அனுமதிக்க முடியாதென்பதால் இன்று பணம் கேட்டதாகவும் உணவகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உணவருந்தி விட்டு, மீண்டும் கடமைக்கு சென்ற போது, உணவக ஊழியர் ஒருவர் அங்கு சென்று, சாப்பிட்ட உணவுக்கான பணத்தை கேட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இதனால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, பொலிஸ்காரர் உணவக ஊழியரை தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.