29.2 C
Jaffna
November 2, 2024
Pagetamil
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

தமிழ் இளைஞர்களை பொலிசில் இணைத்தால் அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக இருப்பார்கள்; நடேசன் ஒருவர்தான் அரசுக்கு எதிராக போரிட்டார்!

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களிடம் ஆயுதத்தையும் வழங்கினால் அவர்கள் தனிநாட்டு போரை ஆரம்பித்து விடுவார்கள் என தென்னிலங்கை தீவிரவாத தரப்புக்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களை அதில் இணைத்து, ஆயுதத்தை வழங்கினால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்பவில்லை. தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள். இப்போது அப்படித்தான் செயற்படுகிறார்கள்“.

இதுதான் அவரது கருத்து.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்குமிடையில் நடந்த சந்திப்பின் போது, இப்படி குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, மாகாணசபை முறைமைக்கு உயிரூட்டுவது பற்றிய பேச்சுக்கள் ஜனாதிபதி தரப்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தென்னிலங்கையிலும் அது பேசுபொருளாகயுள்ளது. மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவது என்றதும், பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது பற்றிய கேள்வி தென்னிலங்கையில் பரவலாக உள்ளதை அவதானிக்க முடிகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை ஏன் வழங்க வேண்டும்?, பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் தமிழர்கள் போர் தொடுப்பார்களா?, சிங்களவர்களுக்கு எதிராக- தனிநாட்டை போல செயற்படுவார்களா என்ற கேள்வி சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பரவலாக உள்ள முக்கியமான சந்தேகம்.

இன்று நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க 13வது திருத்தத்தை பற்றிய உரையை முடித்த பின் சில சிங்கள இனவாத எம்.பிக்கள் வெளியிட்ட கருத்துக்கள், மேற்படி சந்தேகம் சாதாரண சிங்களவர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் உள்ளதை அறிய முடிந்திருக்கும்.

பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதுதான் சுவாரஸ்யமான விடயம்.

13வது திருத்தத்தை வாசித்தறிந்தாலே, இவ்வாறான சந்தேகங்கள் எழாது. அவர்கள் யாரும் 13வது திருத்தத்தை முழுமையாக படித்தறியவில்லை போலும்.

இன்றைய சந்திப்பில் – பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களிற்கு- வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஏன் தேவை?, இப்போதைய பொலிஸ் அமைப்பு தொடர்வதில் என்ன சிக்கல் என்பதை அறியவே டிரான் அலஸ் ஆர்வம் காட்டினார்.

ஏனைய அதிகாரங்கள் இருந்தாலும், பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டால், மாகாண முதல்வரால் அவற்றை பிரயோகிக்கவோ, தீர்வை காணவோ முடியாது உள்ளிட்ட காரணங்களை- நிர்வாக ரீதியாக சுட்டிக்காட்டி தமிழ் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

13வது திருத்தத்தின்படி பொலிஸ் ஆணைக்குழுவில் முதல்வர் ஒருவரையே நியமிக்க முடியம் என்பதையும், மத்திய அரசே 2 பேரை நியமிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது, மாகாணங்கள் சுயாதீனமாக பொலிசை கையாள்வதல்ல என்பதை தமிழ் தரப்பினர் விளக்கமளித்தனர்.

இந்த சந்திப்பின் ஒரு கட்டத்திலேயே- இந்த பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தகவல்களை பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்புகிறீர்களா?“ என தமிழ் தரப்பினர் ஒரு கட்டத்தில் கேட்டனர்.

தான் அப்படி நம்பவில்லையென பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஆரம்ப காலத்தில் பல தமிழ் பொலிசார் கடமையிலிருந்தாலும், பா.நடேசன் (விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர்) ஒருவரே புலிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடியதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள் என்பதில் தனக்கு சந்தேகம் இல்லையென்றும், இப்பொழுதும் அப்படியே செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு மாகாண பொலிஸ் அதிகாரம் பற்றிய சந்தேகங்களை களைவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம். என்றாலும், சில தமிழ் எம்.பிக்கள் உள்ளூரில் பொலிஸாருடன் ஏற்படும் சிக்கல்கள் பற்றி பேச ஆரம்பிக்க, பேச்சு திசைமாறிவிட்டது. பின்னர் உள்ளூர் பொலிஸ் நிலையங்களில் நடக்கும் பிரச்சினைகள் பற்றியே பேசப்பட்டது.

குற்றங்கள் அதிகம் நடப்பதாகவும், பொலிசார் நடவடிக்கையெடுப்பதில்லையென்றும், இதனால் பொலிசாரிடம் முறையிட மக்கள் அச்சமடைவதாகவும் அந்த எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.

பொலிசாரிடம் முறையிட பொதுமக்கள் ஏன் அச்சமடைய வேண்டும் என கேட்ட பொதுப்பாதுகாப்பு அமைச்சர், பொலிசாருக்கு அறிவித்தும் நடவடிக்கையெடுக்கப்படாத விடயங்கள் அல்லது உள்ளூரில் நடக்கும் குற்றங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 மணித்தியாலத்தில் எந்த நேரத்திலேனும் தன்னை தொடர்பு கொண்டு தகவல் தருமாறும், தான் அந்த பொலிஸ் நிலையத்துக்க விசேட கட்டளையிட்டு அல்லது கொழும்பிலருந்தேனும் விசேட அணியை அனுப்பி அந்த குற்றத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வேன் என்றார்.

விரைவில் மீண்டுமொருமுறை சந்தித்து கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘1965 பாணியில் 2,3 பேர் அமைச்சு பதவியேற்று பரிசோதனை செய்யலாம்’: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil

வடக்கிற்குள்ளும் புகுந்தது ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்

Pagetamil

ஈரான் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

Pagetamil

அறுகம்பை பகுதி சுற்றுலா பகுதியில் தாக்குதல் நடக்கலாம்: அமெரிக்கா எச்சரிக்கை!

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில

Pagetamil

Leave a Comment