ஊர்காவற்றுறை- காரைநகர் இடையேயான பயணிகள் கடற்போக்குவரத்து பாதையில் கடமையிலிருந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டு, பயணிகள் மீது தடியடி நடத்தியுள்ளார்.
ரவுடித்தனத்தில் ஈடுபட்ட பணியாளர் ஊர்கவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.
ஊர்காவற்றுறையிலிருந்து காரைநகர் நோக்கி இன்று (25) மாலை 4.30 மணிக்கு புறப்பட்ட பயணிகள் போக்குவரத்து கடற்பாதையில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த போக்குவரத்து பாதையை வீதிஅபிவிருத்தி அதிகாரசபை பராமரித்து வருகிறது.
கடற்பாதை போக்குவரத்தின் போது, வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் 3 பணியாளர்கள் கடமையிலிருக்க வேண்டும். எனினும், இன்று 2 பணியாளர்களே கடமையிலிருந்தனர். அவர்களில் ஒருவர் மதுபோதையில் இருந்தார்.
மாலை நேரமென்பதால் பயணிகள் அதிகமாக இருந்தனர். ஊர்காவற்றுறையிலுள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் அதிகமாக பயணித்தனர்.
இதன்போது, சுமார் 50 பயணிகளுடன் பாதை புறப்பட்டது. அப்போது பாதையில் கடைசியாக ஏறிய சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவரை, மதுபோதையிலிருந்த பணியாளர் ஒருவர் அநாகரிகமாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார். அவரை முன்னால் செல்லுமாறு கூறுவதற்கே இவ்வளவு அட்டகாசமும் செய்தார்.
இதனால் அங்கு சர்ச்சையான நிலைமை உருவானது.
இதையடுத்து, பயணத்தில் ஈடுபட்டவர்கள், அந்த போதை ஆசாமியான வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளரை விலக்கி விட்டுள்ளனர். அவர் முன்னாள் சென்றவர், கடற்பாதை அமைப்பிலிருந்த சட்டகம் ஒன்றை முறித்து எடுத்து, தனது மேற்சட்டையையும் கற்றி எறிந்து விட்டு பயணிகளை தாக்குவதை போல அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
அந்த முதியவரை மீண்டும் தாக்குபவரை போல வர, அங்கிருந்தவர்கள் அவரை விலக்கி விட்டனர்.
இந்த அட்டகாசங்களை அந்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் என்.பொன்ராசா தனது கையடக்க தெலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதை அவதானித்த போதை ஆசாமி, திடீரென கூட்டத்திற்குள் புகுந்து, பொன்ராசாவின் மீது மர சட்டத்தால் ஓங்கியடித்தார். இதில் கையடக்க தொலைபேசி பலத்த சேதமடைந்ததுடன், ஹெல்மெட்டின் மீது அடி விழுந்தது. ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர் அனர்த்தத்திலிருந்து தப்பித்தார்.
இதற்குள், கடற்பாதை காரைநகர் கரையை நெருங்கியது.
போதை பணியாளரின் அட்டகாசத்தையடுத்து, பாதையில் பயணித்தவர்கள் அவரை மடக்கிப்பிடித்தனர். சம்பவத்தை அறிந்து கடற்படையினரும் அங்கு வந்தனர். ஊர்காவற்றுறை பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டது.
பொலிசார் அங்கு வந்த சமயத்தில், பொதுமக்களின் பிடியிருந்து தப்பியோடிய ஆசாமி, அங்குள்ள பனை மரங்களின் பின்னால் சென்று, பனை மட்டை கருக்கலினால் தன்னை காயப்படுத்த முயன்றுள்ளார்.
எனினும், பொலிசாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டவர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளர். நாளை அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, இந்த கடற்பாதை பயணத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபை கண்காணிப்பதில்லையென்றும், பணியாளர்கள் மதுபோதையில் கடமையில் ஈடுபடுவது அடிக்கடி நிகழும் சம்பவமென்றும் பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



