கொத்து ரொட்டி சாப்பிட்டதால் வயிற்று கோளாறு: ஊசி செலுத்தியதும் யுவதி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி!

Date:

கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பற்றி விகாரிக்க நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட விசாரணைக்குழு நேற்று (14) பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டது.

இந்திய கடன்வசதியின் கீழ் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதனால் பலரது பார்வை பறிபோனதாகவும், பலர் உயிரிழந்துள்ளதாகவும் பரவும் தகவல்களின் மத்தியில், மக்களின் அச்சத்தை போக்கவும், தரமான சிகிச்சை உத்தரவாதத்தையும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சுகாதார அமைச்சு உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மயக்க மருந்து செலுத்திய ஏழு நோயாளிகள் மயக்க ஊசி காரணமாக இறந்ததாக கூறப்பட்டது. ராகம வைத்தியசாலைக்கு சென்ற மற்றுமொரு பெண்ணும் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளர்கள் பார்வையற்றவர்களாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த பின்னணியில் பேராதனை வைத்தியசாலை மரணமும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய அல்லகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன என்ற யுவதிக்கு வைத்தியசாலையில் Ceftriaxone எனும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து வழங்கப்பட்டது. சில நிமிடங்களிலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

நாட்டில் தரமற்ற மருந்துகள் குறித்து தீவிர விவாதம் நடந்து வரும் இவ்வேளையில், தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே நிகழ்ந்த இந்த மரணச் செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவி, நோய்க்கு சிகிச்சைக்காக அரச மருத்துவமனைக்குச் செல்ல மக்களிடம் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. .

உயிரிழந்த சாமோதி சந்தீபனி கடந்த 10ஆம் திகதி மதியம் கொத்து ரொட்டி சாப்பிட்டார். அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, வயிற்று வலி ஏற்பட்டு பொத்தப்பிட்டிய கொட்டலிகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தனது வீட்டிலிருந்து கால்நடையாக வைத்தியசாலைக்கு சென்ற மகள், ஆறு பேர் தோளில் சுமந்த பிரேதப் பெட்டியில் வீடு திரும்பியது ஏன் என்பது சாமோதியின் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைவரதும் கேள்வியாகும்.

மார்ச் 12, 2002 அன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் பிறந்த சாமோதி, 21 வருடங்களின் பின்னர் அதே வைத்தியசாலையில் அகால மரணம் அடைவார் என்று அவரது பெற்றோர் ஒருபோதும் நினைக்கவில்லை.

கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய சாமோதி குடும்பத்தின் செல்லப்பிள்ளை. பெற்றோர்கள், இரு மூத்த சகோதரர்களின் அன்புடனும் அக்கறையுடனும் வளர்ந்தார். சாமோதியின் 19 வது பிறந்தநாளில், அவருடைய மூத்த சகோதரர் ஒரு ஸ்மார்ட்போன் அன்பளித்தார்.

தங்கையின் எதிர்பாராத மரணம் குறித்து மூத்த சகோதரன் ரொஷான் குமார ஜயரத்ன பின்வருமாறு தெரிவித்தார்-

“கல்யாண வீட்டு அலங்காரம் செய்வது எனது தொழில். கடந்த 9ம் திகதி கண்டியில் வேலை முடிந்து வரும் போது கொத்துரொட்டி வாங்கிக் கொண்டு வந்தேன். தங்கைக்கு கொத்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். வீட்டிற்கு வந்ததும் காரில் இருந்த பொருட்களை எல்லாம் இறக்கிவிட்டு சாப்பிட்டோம்.நானும், என் மனைவியும், அம்மாவும், தங்கையும் கொத்து சாப்பிட்டோம்.

அதை சாப்பிட்டதில் இருந்து அனைவருக்கும் வயிற்றுப்போக்கு ஆரம்பித்தது. தங்கை வயிறு வலிக்கிறது என்றாள்.

அதன் பிறகு நானும், என் மனைவியும், தங்கையும் தனியார் கிளினிக்கில் மருந்து வாங்கினோம். அம்மாவுக்கு பெரிதாக பிரச்சனை இல்லை, அதனால் அவர் மருந்து வாங்க வரவில்லை.அந்த மருந்தில் நாங்கள் குணமடைந்தோம். ஆனால் சகோதரிக்கு தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, எனவே அவரை 10 ஆம் திகதி கொட்டலிகொட வைத்தியசாலைக்கு அழைத்து சென்றோம். அங்கு சேலைன் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் குணமடையாததால், மறுநாள் காலை ஆம்புலன்சில் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அம்மாவும் அதே ஆம்புலன்சில் சகோதரியுடன் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்“ என்றார்.

பேராதனை போதனா வைத்தியசாலை நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு இல்லாத வைத்தியசாலையாகும்.

அதன்பிறகு நடந்ததைச் சொன்ன சாமோதியின் தாய் மாயா இந்திராணி, தன் மகள் விரைவில் குணமடைவாள் என்று நம்பியதாக கண்ணீருடன் கூறினார்.

“மகளுக்கு பலமுறை வாந்தி, வயிற்றுப்போக்கு வந்ததால் சற்று பலவீனமாக இருந்தாள். அதனால் வைத்தியர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சேலைன் கொடுத்துவிட்டு 12.30 மணியளவில் ஏழாவது வார்டில் அட்மிட் செய்தனர்.

மகளின் கட்டிலுக்கு பக்கத்தில் நாற்காலியில் நான் அமர்ந்திருந்தேன். என்னுடன் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது தாதி வந்து அவள் கையில் இருந்த கனுலாவினட ஊடாக ஊசி மருந்து கொடுத்தார். அப்போது மகள் என்னிடம், ‘அம்மா,எனக்கு கண்  எரிகிறது. , கை வலிக்குது” என்றாள்.

“இது கொஞ்சம் கடுமையான மருந்து” என தாதி கூறினார். இன்னொரு ஊசி போட்டார். அவர் ஊசி செலுத்தி விட்டு திரும்ப, மகளது கண்கள் மேலே செருகின. என்னால் முடியாது என்று அலறிக் கொண், சேலைனை எடுத்துக் கொண்டு கழிப்பறைக்கு ஓடினாள். நான் அவளைப் பின்தொடர்ந்தேன். அவள் மலசலகூடத்திற்குள் வாந்தி எடுப்பதை போல துடித்துக் கொண்டிருந்தாள். அவள் முகமும் கைகால்களும் நீல நிறத்தில் இருந்தன. நான் கத்தினேன். பின்னர் வார்ட்டுக்கு ஓடிவந்து விடயத்தை சொன்னேன். ஒரு தள்ளுவண்டியுடன்  தாதி ஓடி வந்தார். மகளை அதில் ஏற்றிக் கொண்டு வார்டுக்கு கொண்டு வந்தோம். அவள் வாயில் இருந்து சளி வருவதை பார்த்தேன். அவள் சுயநினைவின்றி இருந்தாள். மருத்துவர்கள் அவளை மார்பை அழுத்தி சுவாசிக்க செய்ய  முயன்றனர். ஆனால் என் மகள் கண்களைத் திறக்கவே இல்லை. என் மகளின் உயிரைக் காப்பாற்ற கதறினேன். ஆனால் என் மகள் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டாள். இன்னொரு தாய் இப்படி கஷ்டப்பட வேண்டாம். யாராவது தவறு செய்திருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த மகள், இன்று இல்லை. அந்த ஊசி போடாமல் இருந்திருந்தால், என் அருமை மகள் இன்னும் எங்களுடன் இருந்திருப்பாள்“ என்றார்.

கிரிபட்கும்புர ஸ்வர்ணஜோதி தேசிய பாடசாலையில் பயின்ற சாமோதி சந்தீபனி 2021 ஆம் ஆண்டு கலைப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார். பரீட்சையில் சித்தியடைந்தாலும் பல்கலைக் கழகத்திற்கு தகுதிபெறவில்லை, ஆனால் பாடசாலை நாட்களில் நல்ல விளையாட்டு வீராங்கனையாக இருந்தார். 100 மீ., 400 மீ., 800 மீ., போட்டிகளிலும் பாடசாலையில் வெற்றியீட்டி, மாவட்ட மட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

கிரிக்கெட், கரப்பந்தாட்டம்  ஆகிய போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். அந்த போட்டிகளில் வெற்றி பெற்று அவரிடம் உள்ள சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் தங்கப் பதக்கங்களின் சேகரிப்பு சாமோதியின் விளையாட்டுத் திறமைக்கு சான்றாகும். வேலை நிமித்தமாக கொரியா செல்ல விரும்பிய சாமோதி, கடந்த சில மாதங்களாக கொரிய மொழியை கற்றுக்கொள்வதற்காக கடுமையாக உழைத்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலை சாமோதிக்கு Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பியை வழங்கியிருந்தது. குறித்த மருந்தை செலுத்திய சிறிது நேரத்திலேயே தனது மகள் உயிரிழந்ததாகவும், ஒரு ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே மற்றுமொரு ஊசி போடப்பட்டதாகவும் சாமோதியின் தாயார் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரட்ன இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“வயிற்றுப் பிரச்சினை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயதுடைய இந்த மகளுக்குத் தேவையான சிகிச்சைகள் தாமதமின்றி வழங்கப்பட்டுள்ளமை மருத்துவ சிகிச்சை பதிவேடுகளை அவதானிப்பதன் மூலம் தெரியவந்துள்ளது. நோயாளிக்கு Ceftriaxone செலுத்தப்பட்டது. இது வைத்தியசாலையில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, கடந்த காலங்களில், இதே தடுப்பூசியின் 2,700 குப்பிகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதே வகையைச் சேர்ந்த இந்த மருந்து இலங்கை முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. யுவதியின் மரணத்துக்கு இந்த மருந்தின் தவறுதான் மரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வது கடினம். எனினும் பரிசோதனை அறிக்கைகள் வந்த பிறகே இது குறித்து உறுதியாக கூறமுடியும்.

தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அனாபிலாக்டிக் ஷாக் எனப்படும் மிகவும் அரிதான நிலை காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடலை பிரேத பரிசோதனை செய்த நிபுணர் தடயவியல் மருத்துவர் பிரபாத் சேனசிங்க திறந்த தீர்ப்பை அளித்து, இரத்த திசு மற்றும் உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார். நோயாளி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து செய்யப்படும் சிகிச்சைகள் தொடர்பான அனைத்து மருத்துவ பதிவுகளும் ஒவ்வொன்றாக பரிசோதித்தேன். சிகிச்சையில் மருத்துவர்கள் தரப்பில் தாமதம் ஏற்பட்டதாகவோ, நோயாளிக்கு அளவுக்கு அதிகமாக மருந்துகள் கொடுக்கப்பட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. இந்த யுவதிக்கு கடந்த 11ம் திகதி இரவு 9:00 மணியளவில் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு, மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் சுமார் 1 1/2 மணி நேரம் அவரது உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இறந்தார்” என்றார்.

ஒருமுறை தடுப்பூசி போட்ட சிறிது நேரத்திலேயே தாதி மீண்டும் தடுப்பூசி போட்டதாக சாமோதியின் தாயார் கூறிய குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் பின்வருமாறு பதிலளித்தார்.

“யுவதிக்கு 02 கிராம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கொடுக்க மருத்துவர் பரிந்துரைக்கிறார். அதன்படி, தலா ஒரு கிராம் இரண்டு குப்பிகள் நோயாளிக்கு செலுத்தப்பட்டுள்ளன. இந்த நோயாளிக்கு இதற்கு முன்பு ஒவ்வாமை கண்டறியப்படவில்லை. நோயாளிக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியின் அளவை ஒரே நேரத்தில் கொடுக்கக்கூடிய சிரிஞ்ச்கள் மருத்துவமனையில் இல்லாததால், இரண்டு முறை ஊசி மூலம் உரிய டோஸ் முடிக்கப்பட்டது. இதனால் நோயாளிக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. இதுகுறித்து, நிபுணர்கள் குழுவுடன் பல சுற்று விவாதங்கள் நடத்தினோம். ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் சில மாற்றங்களால் ஒவ்வாமை ஏற்படலாம். நம் நாட்டில் பிரபல பாடகர் தலைமுடியை கறுக்க பயன்படுத்திய சாயத்தால் அலர்ஜி ஏற்பட்டு இறந்தது இதற்கு நல்ல உதாரணம். அரிதாகவே இதுபோன்ற அலர்ஜி ஏற்படும். அப்போது வார்டில் ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்ட ஐந்து மருத்துவர்கள் இருந்தனர். அவர்கள் அனைத்து சிகிச்சைகளையும் தாமதமின்றி வழங்கினர்“ என்றார்.

பேராதனை போதனா வைத்தியசாலையின் உடலியல் பிரிவின் தலைவரான பேராசிரியர் உதய ரலபனாவ, யுவதி உயிரிழந்த வார்டுக்கு பொறுப்பான வைத்தியராவார். யுவதியின் மரணம் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்-

“வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் உடலின் உட்புறத்தில் நுண்ணுயிரிகளின் தாக்கத்தை அளவிடுவதற்காக செய்யப்படும் சிபிஆர் சோதனையின்படி, இந்த நோயாளியின் தொற்று பாதிப்பு மதிப்பு 270 ஆக இருந்தது. சராசரி நபருக்கு, இந்த மதிப்பு 06 க்கும் குறைவாக இருக்கும். உடலில் பக்டீரியா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெளிவாகிறது. அத்தகைய சூழ்நிலையில் நாம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துகிறோம். இந்த யுவதிக்கு பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயோடிக் ஷாட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கொடுப்பதால் ஏற்படும் அலர்ஜியை வெவ்வேறு விதமாக பார்க்கலாம். சிலருக்கு உடலில் சிறிது வலி இருக்கலாம். சிலருக்கு, இந்த ஊசி இரத்த அழுத்தத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும். அப்படியானால், அலர்ஜியுடன் கூடிய அதிர்ச்சியால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மிகவும் அரிதான நிலை” என்றார்.

சாமோதியின் மரணம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நிபுணர்கள் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சும் நியமித்துள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவம் வாய்ந்த சட்ட வைத்தியர் பிரபாத் சேனசிங்கவினால் சாமோதியின் சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்