இளைஞனின் பிறந்தநாளுக்கு மற்றொரு காதலி வாழ்த்து செய்தி அனுப்பியதை, திருமணம் செய்யாமல் சேர்ந்த வாழ்ந்த காதலி பார்த்த விவகாரம் கொலையில் முடிந்துள்ளது.
சேர்ந்து வாழ்ந்த காதலி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை, தும்மோதர பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.
61 வயதான வை.டி.சந்தபால என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் 22 வயதான மகள், சில காலத்தின் முன் திருமணம் செய்து, விவாகரத்தானவர்.
கடந்த 3 மாதங்களின் முன் பேஸ்புக் மூலம் அறிமுகமான இளைஞனுடன் காதலில் விழுந்துள்ளார்.
அவிசாவளை, தும்மோதர பிரதேசத்தில் உள்ள தாவரவியல் பூங்காவின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார் காதலன்.
பேஸ்புக் காதலியின் குடும்பத்தினரின் சம்மதத்துடன், அவரது வீட்டில் காதலன் தங்கியிருந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காதலனின் 25 வது பிறந்த நாள். அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டினுள் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது கையடக்க தொலைபேசிக்கு பெண்ணொருவர் பிறந்தநாள் வாழ்த்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.“ உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்“ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பெண், இளைஞனின் மற்றொரு காதலியென கூறப்படுகிறது.
இந்த வாழ்த்தை வீட்டிலிருந்த காதலி பார்த்துள்ளார். யார் அந்த பெண் என கேட்க, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் கத்தியை எடுத்து, காதலியை குத்தியுள்ளார். மகளை காப்பாற்ற ஓடிவந்த தந்தையையும் சரமாரியாக குத்திக் கொன்றார்.
படுகாயமடைந்த பேஸ்புக் காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.