கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதா?: 8ஆம் திகதி யாழில் கூடுகிறது இலங்கை தமிழ் அரசு கட்சி!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

அன்று காலை 10 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாப்பு திருத்தம் தொடர்பாக கடந்த சில மத்திய செயற்குழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு வருகிறது. பல விவகாரங்களில் இணக்கம் காணப்பட்டுள்ள போதும், சில விவகாரங்களில் இணக்கம் காணப்படவில்லை.

குறிப்பாக, யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்சியின் நோக்கம் பற்றிய குறிப்பில் குழப்பமான நிலைமை நீடிக்கிறது.

கட்சியின் யாப்பில், நோக்கம்- ஐக்கிய இலங்கை இணைப்பாட்சியின் அங்கமாக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின்படி ஒரு சுயாட்சித் தமிழரசும், ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவி இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல், பொருளாதார, கலாசார விடுதலையை காண்பதே இக் கட்சியின் நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சுயாட்சி முஸ்லிம் அரசு என்பதை நீக்கும்படி கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்துகிறார்கள். முல்லைத்தீவில் முஸ்லிம்களின் தராசு சின்னத்துடன் கூட்டணி வைத்த தரப்பினர் அதை எதிர்க்கிறார்கள். அதை நீக்கினால் முல்லைத்தீவில் வாக்கு கிடைக்காதென்பது அவர்களின் நிலைப்பாடு.

மறுவளமாக, சுயாட்சி முஸ்லிம் அரசு என்பதை வைத்திருப்பது கிழக்கு தமிழ் மக்களை அதிருப்தியடைய வைக்கும் என்பது இன்னொரு தரப்பின் வாதம்.

அண்மைய மத்தியகுழு கூட்டங்களில் இது காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கடந்த கூட்டத்திற்கு முந்தைய வவுனியா கூட்டத்தில் பேசிய சீ.யோகேஸ்வரன், “கிழக்கு மக்களின் உணர்வுகளை, வடக்கு தலைமையை கொண்ட தமிழ் அரசு கட்சி புரிந்து கொள்ளாதா? தமிழ் அரசு கட்சியிலும் கிழக்கு மக்கள் ஒதுக்கப்படுகிறார்களா?“ என காரசாரமாக கேள்வியெழுப்பியிருந்தார்.

தமிழ் சுயாட்சி, முஸ்லிம் சுயாட்சி என்ற வாசகங்களை நீக்கி, தமிழ் பேசும் மக்கள் என பொதுவாக குறிப்பிடலாமென பலரும் யோசனை தெரிவித்தனர்.

இதன்பின்னர், கொழும்பில் இரா.சம்பந்தனின் பங்களாவில் நடந்த மத்திய செயற்குழு கூட்டத்திலும் இந்த விடயம் ஆராயப்பட்டது. இதன்போது, தமிழ் சுயாட்சி, முஸ்லிம் சுயாட்சியென்ற பதங்களை நீக்கி, “தமிழ் பேசும் மக்களின் சுயாட்சி..“ என சேர்க்கலாமென இரா.சம்பந்தனும் விருப்பம் தெரிவித்தார்.

இந்த விவகாரம், எதிர்வரும் 8ஆம் திகதி பிரதானமாக ஆராயப்படும்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்