இணையவழியில் உடனடி கடன் வசதிகளை வழங்குவதாக முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபரை கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கம்பஹா, கிரிந்திவிட்ட பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட போது, அந்த நபர் 73 சிம் கார்டுகளை வைத்திருந்தார்.
சந்தேகநபர் பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒன்லைனில் சுமார் ரூ.1.5 மில்லியன் மோசடி செய்துள்ளார்.
29 வயதான குறித்த நபர் கந்தானை பிரதேசத்தில் நிரந்தர வதிவிடமாகவும், தற்போது கம்பஹா கிரிந்திவிட்ட பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடன் தேவைப்படுபவர்களிடம் இருந்து தேசிய அடையாள அட்டை இலக்கங்களைப் பெற்று, அந்த அடையாள அட்டைகளுக்கான சிம் கார்டுகளை வாங்கி, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒன்லைனில் சந்தேக நபரின் கணக்கில் பணத்தை வரவு வைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.