பௌத்த தத்துவம் மற்றும் கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் உரை நிகழ்த்தியதாக விமர்சிக்கப்பட்ட நடாஷா எதிரிசூரிய, இலங்கையை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் சனிக்கிழமை (27) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது கருத்துக்கு எதிராக பல தரப்பினரும் முறைப்பாடு செய்து வரும் நிலையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு கொமெடி சென்ட்ரல் என்ற யூடியூப் சனல் ஏற்பாடு செய்திருந்த ‘மோதாபிமானி’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஏப்ரல் 1ஆம் திகதி கொழும்பு பிஷப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அப்போது அவரது சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது. இருப்பினும், வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பின்னர், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு பௌத்தத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மே 24 அன்று, அவரது உரை யூடியூப்பில் வைரலானபோது சர்ச்சை வெடித்தது. பின்னர் மே 26 அன்று, அவர் அதை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டார்.
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு, பலாங்கொட காஷ்யப தேரர் உள்ளிட்ட பல குழுக்கள் அவருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ததோடு, பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக பொதுமக்கள் செய்யும் முறைப்பாடுகள் பற்றிய குறிப்பும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இதனிடையே, மோதாபிமான என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் காணொளிகள் குறித்து ஆராய்ந்து விசாரணை நடத்தவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.