பருத்தித்துறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சிறுமி நாளை (24) வரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
புலோலி, காந்தியூர் பகுதியில் நேற்று இரவு சிறுமி கைது செய்யப்பட்டார். 15 வயதும் 7 மாதங்களுமான சிறுமியே கைது செய்யப்பட்டார்.
காந்தியூரில் போதைப்பொருள் விற்பனையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் குடும்பமொன்றை இலக்கு வைத்து, விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சிறுமியின் தாய், தந்தை மீது போதைப்பொருள் விற்பனை தொடர்பான பல வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
அதிரடிப்படையினர் போதைப்பொருள் வாங்குபவரை போல முகவர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தனர். தமது வீட்டுக்கு அருகில் வருமாறும், சிறுமி போதைப்பொருளை கொண்டு வந்து தருவார் என்றும் குடும்பத்தினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து, நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
5,500 மில்லிகிராம் போதைப்பொருளை தனது மார்புக்கச்சைக்குள் மறைத்தபடி, சிறுமி வீட்டிற்கு வெளியே வந்த போது, அதிரடிப்படை பெண் உத்தியோகத்தர்களால் அவர் பிடிக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மார்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டது.
சிறுமி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினை, அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், நாளை வரை வழக்கை ஒத்திவைத்தது.
சிறுமியை நாளை வரை மருதங்கேணியிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.