வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகங்களை கவனிக்கவும், மாகாண அதிகாரங்களை மீளப்பெறவும் 6 மாத இடைக்கால சபை: தமிழ் தரப்பில் புதிய நகர்வு!

Date:

மாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்படாமலிருக்கும் சூழலில், வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தை கவனிக்கவும், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தவும், பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறவும் ஒரு பொறிமுறையாக- இடைக்கால சபையொன்றை நிறுவும் படி ஜனாதிபதியிடம் கோரும் நகர்வு தமிழ் தரப்பில் சில அணிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த யோசனைக்கு பிரதான தமிழ் கட்சிகள் சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லையென தமிழ் பக்கம் அறிகிறது.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வர் பிள்ளையானின் ஆலோசகரம், வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாளின் ஆலோசகருமான கலாநிதி கே.விக்னேஸ்வரனின் யோசனையின் அடிப்படையில் இந்த  வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வரைபின்படி, அடுத்த 6 மாதங்களுக்கு வடக்கு, கிழக்கிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்ட இடைக்காலசபையொன்றை நிறுவும்படியும், இந்த காலத்திற்குள் இரண்டு மாகாணசபைகளின் தேர்தலை நடத்த வேண்டாமென்றும், 6 மாதங்களின் பின்னர் தேர்தலை நடத்தும் படியும் கோரப்பட்டுள்ளது.

அந்த வரைபில்-

அரசியலமைப்புச் சட்டத்தின் (பிரிவு 154L) விதிகளின்படி மாகாண நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஜனாதிபதியிடம் தெரிவிக்க வேண்டும். அந்த மாகாண சபையின் சட்டங்களை உருவாக்குவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கும், அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரத்தை ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்ட அதிகாரத்திற்கு வழங்குவதற்கும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.(அரசியலமைப்பு விதி 154M). அந்த அதிகாரம் அந்த மாகாணத்திற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் குழுவாக இருக்கும். எங்கள் பார்வையில், அத்தகைய சபை, மாகாணத்தில் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றின் ஒரு பிரதிநிதியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், மேலும் அவை 13″ திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி அழைப்பு விடுத்துள்ளன.

ஆலோசகர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, மாகாண சபைகளின் உறுப்பினர்களாகவோ அல்லது எந்தவொரு உள்ளுராட்சி சபையின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாகவோ அல்லது அரசாங்கத்தின் அல்லது மாகாண சபையில் பணியாற்றும் அதிகாரியாகவோ இருக்கக்கூடாது. குடியரசுத் தலைவர் தனது சட்டங்களை உருவாக்கும் அதிகாரங்களை ஆலோசகர்கள் குழுவிற்கும் மற்றும் அவர் தேவையெனக் கருதும் பிற செயல்பாடுகளுக்கும் வழங்குவார். அத்தகைய சபை தேவைப்படும்போது சட்டங்களை உருவாக்கி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அதைச் சமர்ப்பிக்கும்.

மாகாணத்தின் பிரதம செயலாளர் ஆலோசகர் குழுவின் செயலாளராக இருப்பார். அவர் மாகாணத்தின் பதிவேடுகளின் மொழியில் பதிவுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அதிகாரியாக இருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பதிவு மொழி தமிழ். ஜனாதிபதி மாகாணத்திற்கு ஒரு அட்வகேட் ஜெனரலையும் நியமிக்க வேண்டும் அல்லது மாற்றாக மாகாண ஆளுநருக்கு ஒரு சட்ட ஆலோசகரை நியமிக்க வேண்டும். இந்த அதிகாரியின் முக்கிய செயல்பாடுகள் சட்டங்களை தயாரிப்பது தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்குவதாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை இந்த குறிப்பாணையின் இணைப்பில் வழங்குகிறோம். அத்தகைய மறுசீரமைப்பு சுமார் ஆறு மாதங்கள் எடுக்கும் என்பது எங்கள் மதிப்பீடாகும். எனவே, மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 2024 ஜனவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் கோரலாம் என்றும், வகுக்கப்பட்ட நடைமுறைகளின்படி தேர்தலை நடத்தலாம் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிலுள் 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கையொப்பத்துடன் இந்த ஆவணத்தை தயாரித்து, ஜனாதிபதியிடம் வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த யோசனையில் அகில இலங்கை தமிழர் மகாசபை, ஈழவர் ஜனநாயக கட்சி (ஈரோஸ்), சமத்துவக்கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி (பத்மநாபா அணி), தமிழ் மக்கள் கூட்டணி (க.வி.விக்னேஸ்வரன் தரப்பு) ஆகியன இதுவரையில் கையெழுத்திட்டுள்ளன.

எனினும், பிரதான கட்சிகள் இந்த யோசனையில் உடன்படவில்லையென தமிழ்பக்கம் அறிந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) ஆகிய கட்சிகள் இந்த வரைபில் கையெழுத்திடுவதில்லையென தீர்மானித்துள்ளன.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஏனைய தமிழ் தரப்புக்களுடனும் கலந்துரையாடி, பொது முடிவொன்றை எட்ட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளது.

இந்த வரைபில் கையெழுத்திடாமலிருக்க முடிவு செய்துள்ளது பற்றி இந்த கட்சிகளின் தரப்பில் தமிழ்பக்கத்திடம் பேசும் போது பல விடயங்களை சுட்டிக்காட்டினர்.

முதலில், இந்த வரைபு மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் விருப்பத்தில் உள்ள ஜனாதிபதிக்கு மேலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடுவோம் என கட்சிகள் சுட்டிக்காட்டின.

இத்துடன், “தமிழ் தேசிய கூட்டமைப்பாக தென்னிலங்கை ஆட்சியாளர்களிடமும், தற்போதைய ஜனாதிபதியிடமும் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 13வது திருத்தத்தை தீர்வாக ஏற்காத போதும், இடைக்கால ஏற்பாடாகவே மாகாணசபை முறையை நடைமுறைப்படுத்த கோரியிருந்தோம். தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அவருடன் தீர்வு விவகாரம் பற்றி  நீண்ட பேச்சு நடத்தியிருந்தோம். ஜனாதிபதி இதுவரை எதையும் செய்யவில்லை. மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவது, அரசியலமைப்பின் மாற்றத்தின் மூலம் அதிகபட்ச அதிகார பரவலாக்கள் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள போது, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால சபை கோரிக்கை, விவகாரங்களை திசைதிருப்பி வி்டக்கூடியது. அதனால் எம்மால் உடனடியாக பதிலளிக்க முடியாது. கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஆராய்ந்த பின்னரே பதிலளிக்க முடியுமென பதிலளித்துள்ளோம்“ என்றார்கள்.

பிரதான தமிழ் கட்சிகளை இந்த வரைபில் கையெழுத்திட வைக்கும் முயற்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வரைபில் இதுவரை கையெழுத்திடாத கட்சிகளின் தலைவர்களை இன்று யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், இன்றைய சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டிருக்கவில்லை.

இன்று காலை 11 மணியளவில் க.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியிலுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பும் கலந்து கொண்டது.

இந்த வரைபு தயாரிப்பில் பங்காற்றும் தரப்பினர், தமிழ் தரப்பினர் மீண்டும் ஒரு வாய்ப்பை தவற விடக்கூடாது என தமிழ் பக்கத்திடம் தெரிவித்தனர்.

“மாகாண அதிகாரம் பற்றிய தெளிவுபடுத்தலுக்காக வடமாகாண ஆளுனர், துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடல் நடத்திய போது, இந்த விவகாரம் அவரிடமும் குறிப்பிடப்பட்டது. அவரும் இந்த யோசனையை வரவேற்றார். வரைபு தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேசியதாகவும், நல்ல யோசனையென ஜனாதிபதி குறிப்பிட்டு, அதை உத்தியோகபூர்வ ஆவணமாக தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரியதாகவும் ஆளுனர் தரப்பில் எமக்கு தெரிவிக்கப்பட்டது.

13வது திருத்தம் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கும் சூழலில், அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ள சூழலில், அவற்றை திரும்பப் பெற்று, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தும் ஒரு பொறிமுறையாகவே இந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

நிறுவப்படும் இடைக்கால சபை, ஒவ்வொரு விவகாரமாக மத்திய அரசுடன் பேசி, பறிக்கப்பட்ட அதிகாரங்களை சுட்டிக்காட்டி, மீள கோருவார்கள். அரசாங்கம் அதை தர வேண்டும். அல்லது அரசாங்கத்தின் உண்மை முகத்தை நிறுவ வாய்ப்பேற்படும்.

அதிகாரங்களை மீளப்பெறுவதற்கான பொறிமுறை இது. இதற்கு ரணில் சம்மதிக்க வேண்டும். மறுத்தால், அவர் தாமதமின்றி சரியான பொறிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்தும்படி இப்பொழுது ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பதவியேற்ற பின்னர் ரணில் இதுவரை இந்தியா செல்ல முடியாமல் இருப்பது, தமிழர் இனப்பிரச்சனை விவகாரத்தினால்தான். இனப்பிரச்சினை விவகாரத்தில் உருப்படியான ஒரு நகர்வை செய்யாமல் அவரை இந்தியா வரவேற்காது. இந்த பின்னணியில், தமிழ் தரப்பினர் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்“ என அவர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த...

இந்திய அரசின் நிதியுதவியுடன் காலியில் அமைக்கப்பட்ட 22-வது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு–

இந்திய அரசின் நிதியுதவியுடன்  காலி மாவட்டத்தில் 'திடுலா'  (Didula)   மாதிரி கிராமத்தில்  நிர்மானிக்கப்பட்ட...

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை விரட்டியடித்தது இலங்கை!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்