நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட நானுஓயா, கிலாஸோ தோட்ட தமிழ் வித்தியாலயத்தில் தரம் 4 மற்றும் 5 இல் கல்வி கற்கும் 31 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிலாஸோ தோட்ட தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு இன்று (28) மதியம் வழங்கப்பட்ட இலவச சத்துணவு ஒவ்வாமை காரணமாக இந்த மாணவர்கள் சுகவீனம் அடைந்த நிலையில், உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாடசாலையில் 126க்கு அதிகமான மாணவர்கள் தரம் 1 முதல் தரம் 5 வரை கல்வி கற்கின்றனர்.
இவர்களுக்கு வழமையாக சமைத்த இலவச உணவு பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மதியம் வழங்கப்பட்ட சமைத்த உணவினால் 31க்கு அதிகமான மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் திடீரென ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாடசாலை நிர்வாகம் தோட்ட மக்களின் உதவியுடன், வாகனங்களை பெற்று, உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதித்துள்ள நிலையில், அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாணவர்களுக்கு இன்றைய தினத்தில் சமைத்த உணவாக போஞ்சி, கோவா கீரை, பருப்பு மற்றும் டின் மீன் ஆகிய கறிகளுடன் சோறு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது .
மேலும் இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார, உணவு பரிசோதனை பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு பரிசோதணை மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன