ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தை சேர்ந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
“ரோஹிதவுக்கு அமைச்சர் பதவியை வழங்காமல் ராஜிதவுக்கு மட்டும் வழங்காதீர்கள்” என ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரோஹித அபேகுணவர்தன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர். அவருக்கு அமைச்சு பதவி வழக்காமல், ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என ஜனாதிபதியிடம் கட்சி மேலும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரத்ன விரைவில் புதிய அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக கடந்த சில வாரங்களாக பல்வேறு ஊடகச் செய்திகள் வெளியாகின. இதேவேளை, அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயர் பட்டியலும் சில நாட்களின் முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அந்த பட்டியலில் .ரோஹித அபேகுணவர்தனவின் பெரும் இடம்பெற்றிருந்தது.