யாழ்ப்பாணம்- இருபாலையில் இயங்கி வந்த கானான் ஜெப ஆலயத்தின் மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 வயதான போதகர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கானான் ஜெய ஆலயத்தின் மாணவர் விடுதி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே இயங்கியது. சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுமதியை பெறாமல் சட்டவிரோதமாக செயற்பட்டிருந்தது.
அந்த விடுதியிலிருந்து 3 சிறுமிகள் தப்பிச்சென்றதையடுத்து இந்த விடயம் வெளிப்பட்டது.
3 சிறுமிகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், 80 வயதான தலைமைப் போதகர் தகாத முறையில் செயற்பட்டு, பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தலைமைப் போதகரை கைது செய்ய பொலிசார் முயன்ற போது, அவர் இருபாலையிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகினார்.
கொழும்பில் போதகர் நேற்று கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்றமொன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது கடவுச்சீட்டை முடக்கிய நீதிமன்றம், அவரை பிணையில் விடுவித்ததுடன், யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றமொன்றில் உடனடியாக சரணடையுமாறு அறிவித்தது.




