பேராதனை இலுக்வத்த பிரதேசத்திலுள்ள முன்பள்ளி ஒன்றில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற முன்பள்ளி ஆசிரியை ஒருவர் நேற்று (07) காலை வீதியில் வைத்து கழத்தறுத்து கொல்லப்பட்டுள்ளார்.
முருத்தலாவ பேராதனையைச் சேர்ந்த அஞ்சலி சாப்பா செவ்வந்தி ஜயவீர என்ற 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முன்பள்ளி ஆசிரியையின் முன்னாள் காதலனே இந்த கொடூர குற்றத்தை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று காலை முன்பள்ளியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக பாடசாலை ஆசிரியர் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். கினிஹேன மயானத்திற்கு அருகிலுள்ள பாதையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அதன்போது, முன்பள்ளி ஆசிரியையை திருமணம் செய்யவிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் தொலைபேசியில் அழைத்துள்ளார்.
காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென அவரை தாக்கிய குற்றவாளி கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த காதலன், உடனடியாக அஞ்சலியின் தாயாரை அழைத்து, அஞ்சலி ஆபத்தில் இருக்கும் விடயத்தை கூறியுள்ளார். குடும்பத்தினர் சென்ற போது, அஞ்சலி உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.
அவரை பிரதேசவாசிகள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் நடந்த போது, தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த காதலன், “சங்கிலியை தருகிறேன். என்னை குத்தாதே“ என அஞ்சலி சத்தமிட்டது கேட்டதாக கூறியுள்ளார்.
பழைய காதல் உறவால் ஏதாவது சிக்கல் வருகிறதா என தான் மகளிடம் கேட்டிருந்ததாகவும், அப்படியெதுவும் இல்லையென மகள் கூறியிருந்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர குற்றத்தை செய்த சந்தேக நபர் நேற்று மாலை வரை கைது செய்யப்படவில்லை.