பேராதனை, இலுக்வத்தை பகுதியில் இன்று (07) காலை 25 வயதுடைய முன்பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
அஞ்சலி சாப்பா (25) என்ற இளம் யுவதியே கொல்லப்பட்டுள்ளார்.
பாலர் பாடசாலையில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் கினிஹேன மயானத்திற்கு அருகில் அவரது கழுத்தை யாரோ அறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்பள்ளி ஆசிரியை வீட்டுக்கு வரும் போது யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதுடன், அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.