ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் போலி டொமினிகன் குடியரசின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈராக் இளைஞர் மற்றும் அவரது தந்தையை நாடு கடத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவர் 18 வயது ஈராக் இளைஞர். Fly Dubai Airlines இன் FZ-569 இலக்க விமானத்தில் டுபாயிலிருந்து இன்று (07) அதிகாலை 01.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அங்கு, இலங்கைக்குள் பிரவேசிப்பதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அமைந்துள்ள குடிவரவுத் திணைக்கள சாளரத்தை அணுகி டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை வழங்கினார்.
சந்தேகத்தின் அடிப்படையில் இந்த ஆவணங்களை கட்டுநாயக்க விமான நிலைய எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவில் சமர்பிக்க அங்கு பணியாற்றிய குடிவரவு குடியகழ்வு பிரதான அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, விசாரணையில், பாஸ்போர்ட்டின் பயோ டேட்டா பக்கம் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர், இந்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவருடன் தந்தையும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள், அவர்கள் வந்த அதே விமானத்தில் அவரை மீண்டும் டுபாய்க்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பிரதம குடிவரவு அதிகாரி எஸ்.எல்.களுபோவிலவின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ், குடிவரவு அதிகாரி பி.பி.டி.முனசிங்க இதற்கான உத்தியோகபூர்வ பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இதேபோன்று கடந்த வாரத்தில் இலங்கைக்கு வந்து ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற நான்கு ஈராக் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.