உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டதைக் காண முடிந்தது.
எதிர்க்கட்சி எம்.பி.க்களும் சபாநாயகர் மற்றும் அரசாங்க எம்.பி.க்கள் முன்பாக நின்று கொண்டு, பதாகைகளை ஏந்தியவாறு, தேர்தலை நடத்துமாறு கோரி தொடர்ந்து கோஷமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாளை (21) காலை 09.30 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.
உள்ளூராட்சி தேர்தல்கள் 2023 மார்ச் 09 ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் அறிவித்தது.
எவ்வாறாயினும், அரசாங்கம் தேர்தலுக்கு தயங்குவதால், பல்வேறு முட்டுக்கட்டைகள் இடப்பட்டதால், தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதில் நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட சிரமங்களை காரணம் காட்டி தேசிய தேர்தல் ஆணைக்குழு நேற்று இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.