கொழும்பு, பிலிப் குணவர்தன மாவத்தையில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் பெண் சுகாதார ஊழியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வாரம் பெப்ரவரி 15ஆம் திகதி சில நாட்களுக்கு மூடப்பட்டு திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
பெப்ரவரி 14 ஆம் திகதி விசா மையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழுவொன்று பல உபகரணங்களைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
சந்தேகநபர்களிடம் இருந்து 300,000 ரூபாய் பெறுமதியான மடிக்கணினி, டி.வி.ஆர், கமரா மற்றும் ஐ-பாட் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்திய விசா விண்ணப்ப மையத்தில் உள்ள நாட்டு மேலாளர் அலுவலகத்தை கொள்ளையர்கள் உடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் உபகரணங்களை திருடுவதற்காக அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக உடைத்துள்ளார்களா என்பது குறித்து விசாரணைகள் தொடர்வதாக பேச்சாளர் கூறினார்.
வெள்ளவத்தையில் 53 வயதுடைய இரு சந்தேகநபர்களும், கிருலப்பன மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் 49 மற்றும் 54 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண் துப்புரவுப் பணியாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மையம் உடைக்கப்பட்டிருக்கலாம் என்றார்.
விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.




