அமெரிக்காவிற்கும், அதன் கூட்டாளிகளும் இப்பொழுது பலூன் பதட்டத்தில் சிக்கியுள்ளன. பறக்கும் பலூன்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ள வெறித்தனத்தின் விளைவாக, அதிநவீன விமானங்களை பயன்படுத்தி, அதிநவீன ரொக்கப்பட்டுக்களால் பலூன்கள் சுட்டு விழுத்தப்பட்டு வருகின்றன.
பலூன்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை என்றும், அவற்றை சுட்டுவிழுத்துவது தமது இராணுவ வலிமையின் குறியீடு என்றும் உருவாக்கப்பட்டு வரும் ஊடக மாயைகளின் மத்தியில் மற்றொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள ஒரு பொழுதுபோக்குக் குழு, தம்மால் பறக்க விடப்பட்டு காணாமல் போன பலூனையும் அமெரிக்க விமானப்படை சுட்டு விழுத்தியிருக்கலாமென கூறியுள்ளனர்.
தம்மால் ஏவப்பட்ட பலூனின் பெறுமதி வெறும் 12 டொலர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த பொழுதுபோக்கு குழுவின் தகவல் உண்மையெனில், அமெரிக்கா குறிப்பிட்டதை போல, சுட்டு விழுத்தப்பட்டவை அனைத்தும் சீனாவின் உளவு பலூன்கள் அல்ல.
அத்துடன், வெறும் 12 டொலர்கள் பெறுமதியான பலூனை அமெரிக்க விமானப்படை 439,000 டொலர்கள் மதிப்பிலான ஏவுகணையைப் பயன்படுத்தி சுட்டு விழுத்தியுள்ளன.
அமெரிக்காவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு குழுவான வடக்கு இல்லினாய்ஸ் பலூன் பிரிகேட், பெப்ரவரி 11 அன்று, அலாஸ்காவில் அதன் பைக்கோ பலூன்களில் ஒன்றை “காணவில்லை” என்று கூறியதுஃ
கனடாவில் உள்ள யூகோன் பிரதேசத்திற்கு அருகில் அமெரிக்க விமானப்படையின் F-22 போர் விமானத்தால் சைட்விண்டர் ஏவுகணையைப் பயன்படுத்தி சுட்டு விழுத்தப்பட்டுள்ளது.
இந்த பலூன், தமது பொழுதுபோக்கு பலூன் என அந்த குழு குறிப்பிட்டது.
சனிக்கிழமை (பெப்ரவரி 11) GMT நேரப்படி அதிகாலை 1 மணியளவில் தென்மேற்கு அலாஸ்காவின் கடற்கரைக்கு அருகில் அவர்களின் ‘K9YO’ பலூன் கடைசியாகப் காணப்பட்டதாக அந்த தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹுரோன் ஏரி மற்றும் அலாஸ்காவுக்கு அருகில் கீழே விழுந்த இரண்டு அடையாளம் தெரியாத பொருட்களுடன், முன்னதாக சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சீன கண்காணிப்பு பலூனின் பாகங்களைத் தேடும் பணி முடிவுக்கு வந்ததாக அமெரிக்க இராணுவத்தின் வடக்கு கட்டளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பலூனின் பாகங்கள் மீட்கப்பட்டு வர்ஜீனியாவில் உள்ள ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் லேபரட்டரிக்கு எதிர் நுண்ணறிவு சுரண்டலுக்காக மாற்றப்படுகின்றன என்று அது மேலும் கூறியது.




