பிரதமர் மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில், பிபிசி-க்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிபிசி எடுத்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதையடுத்து, இந்து சேனா அமைப்பு சார்பில் அதன் தலைவர் விஷ்ணு குப்தா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், ”இந்தியாவுக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பிபிசி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே, பிபிசிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், இந்தியாவுக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் செய்திகள் வெளியிட்டது தொடர்பாக அந்நிறுவனத்திடமும், அதன் பணியாளர்களிடமும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரி இருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, எம்எம் சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷ்ணு குப்தா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், ”இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் பிபிசி தயாரித்த இந்தியா: மோடிக்கான கேள்விகள் எனும் ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில், நாட்டிற்கு எதிராக பிபிசி செயல்பட்டு வருகிறது. பிபிசியின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டது. இந்தியாவுக்கு எதிரானது.
இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத சர்வதேச ஊடகங்கள், குறிப்பாக பிபிசி, இந்தியாவுக்கு எதிராக ஒரு சார்புடன் செய்திகளை வெளியிட்டு வருகிறது. எனவே, பிபிசி இந்தியாவில் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.