துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், சிரியாவிலும் 850 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்ட சிரியா, இந்த நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ளது.
தனது நாட்டுக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் சிரிய அரசாங்கம் திங்களன்று கோரிக்கை விடுத்துள்ளது.
“பேரழிவு தரும் பூகம்பத்தை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு சிரியா ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு… சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிற மனிதாபிமான” குழுக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிரிய வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்தாத், ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் உதவி குழுக்களை சந்தித்த பின்னர், “சர்வதேச அமைப்புகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க சிரிய அரசாங்கம் தயாராக உள்ளது, எனவே அவர்கள் சிரியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முடியும்” என்றார்.
இந்த நிலநடுக்கத்தால் சிரியாவின் அலெப்போ, ஹமா, லதாகியா மற்றும் டார்டஸ் மாகாணங்கள் உட்பட, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 461 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 1,326 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறைந்தது 390 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று வைட் ஹெல்மெட்ஸ் மீட்பு குழு தெரிவித்துள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலான மோதல்கள் மற்றும் பல வருட பொருளாதார தடைகள் சிரியாவின் பொருளாதாரத்தையும் பெரிய அளவிலான பேரழிவு மீட்பு திறனையும் பாதிப்படைய வைத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் உட்பட டமாஸ்கஸுடன் உறவுகளை மீட்டெடுத்த சில வளைகுடா நாடுகளுக்கு கூடுதலாக, சிரிய அரசாங்கத்தின் முக்கிய நட்பு நாடுகளான ஈரான் மற்றும் ரஷ்யா உதவி அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளன.
சிரியாவில் 2011 இல் அமைதியான போராட்டங்களை இராணுவ சக்தி பிரயோகிக்கப்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து சிரியா, உலக வல்லரசுகளின் பரிசோதனை களமாக மாறியது.
ஒரு தசாப்தமாக நீடித்த உள்நாட்டு போரில் ஏறக்குறைய அரை மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் இந்த மோதலால் நாட்டின் போருக்கு முந்தைய மக்கள் தொகையில் பாதி பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பலர் துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிரியாவில் குறைந்தபட்சம் 2.9 மில்லியன் மக்கள் பட்டினியில் விழும் அபாயத்தில் உள்ளனர், மேலும் 12 மில்லியன் மக்களுக்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை என்று ஜனவரி மாதம் ஐ.நா. தெரிவித்தது.