நாளை இலங்கையின் 75லது சுதந்திரதினம். கடந்த 74 வருடங்களாக தமிழ் மக்கள் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுட்டித்து வரும் நிலையில், நாளையும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புடன், கரிநாள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி இடம்பெறவுள்ளது.
அதனை முன்னிட்டு இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் பேரணி செல்லும் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு பல்கலைக்கழக வளாகத்தில் கருப்பு கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.
நாளை வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கிலுள்ள பிரதான நகரங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்படும். பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு ஆதரவளிப்பதாக முக்கிய நகரங்களிலுள்ள அனைத்து வர்த்த சங்கங்களும் தீரமானித்துள்ளன.
அத்துடன், போக்குவரத்து சேவைகளும் வழக்கம் போல இடம்பெறாது.
யாழ் நகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள ஏனைய நகரங்களில் முழுமையாக கதவடைப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் தனியார் கல்வி நிலையங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடும் முடங்கும்.
இதே நிலையில் தமது வீடுகள் வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கருப்பு கொடியினை கட்டி அனைத்து தரப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிவில் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.