சுன்னாகத்தில் சினிமா பாணியில் வாகனத்தால் மோதி மோதலில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்ட வந்த மூவர், வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று சட்டத்தரணி மூலம் சரணடைந்துள்ளனர் என சுன்னாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் நிசா விக்டர் கும்பல் பயணித்த காரின் மீது, மகேந்திரா வாகனம் ஒன்றினால் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டது. விபத்தின் பின் காருக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிடிருந்தனர்.
ஜெகன் கும்பலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.
இந்த தாக்குதலைத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஜெகன், ரஞ்சித் மற்றும் முத்து என்றழைக்கப்படும் மூவர் வவுனியாவில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று சட்டத்தரணி மூலம் மூவரும் சரணடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் நான்கு பேர் குறித்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புபட்டுள்ளனர் எனவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சில மாதங்களின் முன்னர் ஜெகனை வாளால் வெட்டிய கனியென்ற ரௌடி காரில் பயணிப்பார் என கருதியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ரௌடிகளை பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்ய திட்டமிடுவதாக வெளியான செய்தியையடுத்து, தலைமறைவாக இருந்த ரௌடிகள் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




