யாழ் மாநகரசபை புதிய முதல்வர் தெரிவு இன்று (19) இடம்பெறவுள்ளது. இதில் அனேகமாக சொலமன்சூ சிறில் முதல்வராக தெரிவாக வாய்ப்புள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதை தொடர்ந்து, அப்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறந்தார். இதை தொடர்ந்து, புதிய முதல்வர் தெரிவா அல்லது சபை கலையுமா என்ற விவாதங்களின் பின்னர், புதிய முதல்வர் தெரிவு இடம்பெறுமென வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.
இன்று புதிய முதல்வர் தெரிவு நடைபெறும்.
இன்றைய முதல்வர் தெரிவில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் இ.ஆர்னோல்ட் போட்டியிடுவதென இன்று உறுதி செய்யப்பட்டது.
எனினும், ஆர்னோல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதில் சட்டரீதியான தடங்கல்கள் உள்ளதை தமிழ்பக்கம் ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தது.
தேர்தல் ஆணைக்குழு மாகாண ஆளுனர்களிற்கு அனுப்பி வைத்த கடிதமொன்றில் இரண்டு முறை வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் பதவிவிலகியவர்கள், அதேசபையின் காலப்பகுதியில் மீண்டும் முதல்வராக போட்டியிட முடியாதென அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை கட்சியின் பிரமுகர்கள் சுட்டிக்காட்டிய போதும், ஆர்னோல்ட் தரப்பு அதை ஏற்கவில்லை. தேர்தல்கள் திணைக்களத்திற்கு சட்டவாக்க அதிகாரம் கிடையாது என அவர்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர்.
இதுவரை தமிழ் அரசின் வேட்பாளர் ஆர்னோல்ட்டா அல்லது சிறிலா என நீடித்த சர்ச்சை நேற்றைய தமிழ் அரசு கூட்டத்தில் நிலவவில்லை. தமிழரசின் வேட்பாளர் ஆர்னொல்டே என நேற்று சிறிலும் இணைந்தே ஆர்னோல்ட்டை முன்மொழிந்தார்.
எனினும், இன்று ஆர்னோல்ட் முதல்வர் பந்தயத்தில் குதிக்க வாய்ப்பிருக்கிறதா என்பது கேள்விக்குறியே. உள்ளூராட்சி ஆணையாளர் ஆர்னோல்ட் போட்டியிடுவதை அனுமதிக்க மாட்டார் என கருதவே இடமுண்டு.
அப்படியானால் சிறிலை தமிழ் அரசு கட்சி முன்மொழியும்.
ஆர்னோல்ட் அந்த முடிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கலாம். ஆனால், அதற்குள் சபையின் ஆயுளும் முடிந்து விடக்கூடும்.
இன்று முதல்வர் கோதாவில் குதிப்பதா என்பதில் மணிவண்ணன் தரப்பும் குழப்பமாக உள்ளது. மணிவண்ணனை எதிர்ப்பதில் பல தரப்புக்கள் உறுதியாக உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில், பிரிந்து சென்ற தமிழ் அரசு கட்சியின் 10 உறுப்பினர்கள். தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும் மணிவண்ணனை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளனர். பரந்துபட்ட கூட்டணி உருவாகுவதை அவர்தான் குழப்பினார் என்ற கோபம் அவர்களிற்கு.
இதனால் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்பது மணிவண்ணன் தரப்பிற்கும் தெரிந்துள்ளது. அதனால் அவர்கள் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விடக்கூடும்.