கொழும்பு குதிரைப்பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவியான தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அவரை தேசிய மனநல நிறுவகத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்புமாறு உத்தரவிட்டதுடன், அவரது மன நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சத்துரங்க டி சில்வா, பிரதான நீதவான் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் காட்டும் மேலதிக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயனவில் வசிக்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி (24) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காதலனுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, 2 மாதங்களின் முன்னர், காதல் உறவிலிருந்து விலகலாமென மாணவி தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த கொலை நிகழ்ந்துள்ளது.




