பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆதர்ஷ கரந்தன, பேராசிரியர் மாரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் நீதிமன்றில் முன் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.
பேராசிரியர் ஆஷு மாரசிங்க நாயை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வீடியோ பதிவு ஆதர்ஷ கரந்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட பின்னர் வைரலாகியுள்ளது.
ஊடகங்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்றும், இதற்காக ஒரு வீடியோ கிளிப்பிங் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தன்னைக் கைது செய்ய முயற்சிப்பதாக ஆதர்ஷ கரந்தன தனது முன் பிணை மனுவில் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த விண்ணப்பம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, சிஐடி பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோரை ஜனவரி 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குற்றச்சாட்டின் பேரில் தான் கைது செய்யப்பட்டால், தன்னை முன் பிணையில் விடுவிக்க சிஐடிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் ஆதர்ஷ கரந்தன நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமக்கு அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி முறையே ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷ கரந்தனவிடம் முறையே 500 மில்லியன் ரூபா மற்றும் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். .