ஈஷா யோகா மையத்துக்கு சென்ற பின் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

Date:

ஈஷா யோகா மையத்துக்கு பயிற்சிக்கு சென்ற பின் காணாமல் போன பெண், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சுபஶ்ரீ, ஒரு பனியன் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில், சுபஶ்ரீ கடந்த 11ஆம் தேதி காலை கோவை பூண்டி அருகேயுள்ள ஈஷா யோகா மையத்துக்கு ஒரு வார கால பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். பயிற்சி முடிந்து 18ஆம் தேதி அவர் வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் சுபஶ்ரீ வரவில்லை. இது தொடர்பாக பழனிக்குமார் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.

இது குறித்து பழனிக்குமார் அப்போது கூறுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே என் மனைவி ஈஷா யோகா மையம் நடத்திய ‘Silence’ பயிற்சியில் கலந்து கொண்டார். அதேபோலத்தான் இந்த முறையும் கலந்துகொண்டார். 11ஆம் தேதி காலை 6 மணி அளவில் நான்தான் அவரை ஈஷா யோகா மையத்தில் விட்டேன்.

அவரை அழைத்து வருவதற்காக 18ஆம் தேதி காலை மீண்டும் ஈஷா சென்றேன். 11 மணிக்கு பயிற்சி முடிந்து வெளியில் வந்திருக்க வேண்டும். அவர் வராததால், 3 மணி அளவில் நான் உள்ளே சென்று விசாரித்தேன். அப்போது வகுப்பு முடிந்து எல்லோரும் சென்று விட்டதாகக் கூறினர்.

அங்கிருந்த சிசிடிவியை ஆய்வுசெய்ததில், என் மனைவி காலை 9:30 மணிக்கு வகுப்பு முடிந்து சர்ப்ப வாசல் வழியாக வெளியே சென்றிருக்கிறார். எனது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. எடுக்க முடியாததால் மீண்டும் அந்த எண்ணுக்கு நான் அழைத்தேன்.

அதில் பேசியவர், “என் கணவருக்குப் பேச வேண்டும் என்று ஒரு பெண் என்னிடம் போன் வாங்கினார். போன் எடுக்காததால் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறினார். மேலும் என் மனைவி ஒரு காரில் லிஃப்ட் கேட்டு, செம்மேடு முட்டத்துவயல் பகுதியில் இறங்கியிருக்கிறார். அதன் பிறகு அவரை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. அக்கம் பக்கம் யாரிடம் கேட்டும் என் மனைவியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதனால்தான் போலீஸில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.

பயிற்சிக்காக ஈஷா யோகா மையம் சென்று சுபஶ்ரீ, கையில் ஒரு பை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில் வெளியே வரும்போது கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை நிற உடையில் சுபஶ்ரீ சாலையில் ஓடும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியிருக்கிறது.சுபஶ்ரீ எதற்காக அவசரமாக வெளியில் ஓடினார், அவர் எங்கே சென்றார் என போலீஸார் விசாரித்து வந்தனர்.

மாயமான சுபஸ்ரீயை கண்டுபிடிக்க 6 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவரின் புகைப்படம் அனைத்து ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இரண்டு வாரங்களாகியும் அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது.

கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி பத்ரிநாராயணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூட , “மாயமான பெண் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நடந்து கொண்டிருப்பதால், அதுதொடர்பான விவரங்களை வெளியில் சொல்ல முடியாது.”என்று கூறினார்.

சுபஸ்ரீ மாயமானது தொடர்பான ஒரு சி.சி.டி.வி காட்சி தவிர வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சிலரிடம் சுபஸ்ரீ லிஃப்ட் கேட்டு சென்றதும், சிலரின் செல்போனில் இருந்து கணவர் பழனிக்குமாருக்கு தொடர்பு கொண்டதும் தெரியவந்தது. துரதிர்ஷ்டவசமாக அப்போது கணவர் போன் எடுக்கவில்லை. இதனால் சுபஸ்ரீயை கண்டறியும் துப்பு ஏதும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கோவை செம்மேடு அடுத்த காந்தி நகர் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் சடலம் மிதப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.மேலும் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மிதந்த பெண் வெள்ளை நிற உடை அணிந்திருந்ததால் அண்மையில் ஈஷா யோகா மையத்திலிருந்து தப்பிய சுபஸ்ரீயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரின் கணவர் பழனிக்குமாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

கணவர் பழனிக்குமார் அங்கு வந்து அது சுபஸ்ரீ என உறுதிபடுத்தினார். அவர் அணிந்திருந்த மோதிரத்தையும், யோகா மையத்தில் அணிவித்திருந்த கையில் இருந்த பேண்டையும் வைத்து சுபஸ்ரீயின் உடல்தான் என்பதை கணவர் உறுதிபடுத்தியுள்ளார்.

இதனிடையே சுபஸ்ரீ மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...

தையிட்டி காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராகத் தளராது போராடுவோம்!

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை...

நிந்தவூரில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பாலர்களுக்கும் மகிழ்ச்சிப் பரிசுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்