சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (13) சங்கானை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண செயற்பாட்டு மையம் மற்றும் மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த கருத்தரங்கின் வளவாளர்களாக திருமதி சசிதரன் குவேதினி (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம் – சங்கானை) கே.கருணாகரன் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – யாழ். மாவட்ட செயலகம்) ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
தொழில் வாய்ப்பிற்கு தேவையான உள ஆற்றலை மேம்படுத்துவது எவ்வாறு, நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வது எவ்வாறு, தொழில்வாய்ப்பில் இணைவது எவ்வாறு போன்ற விடயங்கள் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நிகழ்வின் அனுசரணையாளர்கள், யாழ். மாவட்ட செயலகத்தினர், சங்கானை பிரதேச செயலகத்தினர், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.