ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்கு இன்னும் வலுவான ஆயுதங்களை விரும்பும் உக்ரைனின் அவசர கோரிக்கையைத் தொடர்ந்து, அதன் அதிநவீன பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா இறுதி செய்து வருகிறது.
அமெரிக்கா நாளை வியாழன் அளவில் பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை வழங்குவது பற்றிய முடிவை அறிவிக்கலாம் என்று ரொய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்கள் செவ்வாயன்று அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் ஜனாதிபதி ஜோ பிடனின் முறையான ஒப்புதலுக்காக விவகாரம் காத்திருக்கிறது.
உக்ரைனிய உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க, தனது நாட்டிற்கு இன்னும் மேம்பட்ட ஆயுதங்களை வழங்குமாறு மேற்கத்திய தலைவர்களிடம் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தொடர்ந்து கோரி வருகிறார்.
பேட்ரியாட் அமைப்பை வழங்குமாறு குறிப்பாக சுட்டி கோரிக்கை விடுத்திருந்தார்.
பேட்ரியாட் வான் பாதுகாப்புத் திறனைப் பெறுவது உக்ரைனுக்கு “மிகவும் முக்கியமானது” என்று ஓய்வுபெற்ற இராணுவ லெப்டினன்ட் கேணலும், ட்ரம்ப் காலத்தில் வெள்ளை மாளிகையில் உக்ரைன் கொள்கை விவகாரத்தின் தலைவருமான அலெக்சாண்டர் விண்ட்மேன் கூறினார்.
“இவை உக்ரைனியர்களுக்கு இருக்கும் பல்வேறு சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும், குறிப்பாக ரஷ்யர்கள் ஈரானிடமிருந்து குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு வந்தால் அதை உக்ரைன் சமாளிக்கக்கூடியதாக இருக்கும்” என்றார்.
எனினும், இது பற்றி பென்டகன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. உக்ரைனிய அதிகாரிகளிடமிருந்தும் உடனடியாக கருத்து வெளியாகவில்லை.
உக்ரைனிற்கு பேட்ரியாட் அமைப்பை வழங்குவது தொடர்பில், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் நேட்டோவை எச்சரித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை யுத்த விரிவாக்கமாக ரஷ்யா கருதும்.
பெப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய மோதலாக மாறியுள்ள இந்த யுத்தத்தில், உக்ரைனிற்கு பின்னால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உள்ளன. அமெரிக்கா உக்ரைனுக்கு 19.3 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்கியுள்ளது.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சோவியத் கால அமைப்புகள் முதல் நவீன மேற்கத்திய தயாரிப்புக்கள் வரையானன வான் பாதுகாப்புகளை உக்ரைனிற்கு வழங்கி வருகின்றன.
Raytheon Technology Corp’s (RTX.N) Patriot போன்ற தரை அடிப்படையிலான வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்வரும் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
பேட்ரியாட் மிகவும் மேம்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பொதுவாக இவை வரையறுக்கப்பட்ட அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை பெறுவதற்கு உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகள் போட்டியிடுகின்றன.
பேட்ரியாட் அமைப்புக்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு உக்ரைனியப் படைகளுக்கு ஜெர்மனியில் பயிற்சி அளிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். பயிற்சி பல மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் பதிப்பு, அதன் வீச்சு அல்லது எத்தனை அலகுகள் அனுப்பப்படும் என்பது போன்ற விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
உக்ரைனியர்கள் பேட்ரியாட் அமைப்பை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அமெரிக்கா கட்டுப்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.அமெரிக்கா ஏற்கெனவே உக்ரைனுக்கு அதிநவீன ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ரொக்கெட் சிஸ்டம் (ஹிமார்ஸ்) லோஞ்சர்களை வழங்கியிருந்தது. என்றாலும், அதன் முழு திறனுடன் வழங்கவில்லை. அதன் வீச்செல்லையை கணிசமாக குறைத்தே வழங்கியிருந்தது.
பேட்ரியாட் அமைப்பு பொதுவாக விமானம், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட மேம்பட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ரேடார் மற்றும் பிற ஆதரவு வாகனங்களுடன் லோஞ்சர்களையும் உள்ளடக்கியது.