நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத குளிர் காலநிலையினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 802 மாடுகள், 34 எருமைள், 256 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி வடக்கு மாகாணத்தில் 358 மாடுகளும் 191 ஆடுகளும் உயிரிழந்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகளும் 34 எருமைகளும் 65 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் வியாழன் (8) மற்றும் நேற்று (9) ஆகிய இரு தினங்களில் மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகள் திடீரென உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் தற்போது இந்த இடங்களுக்குச் சென்று விலங்குகளுக்கு தேவையான சுகாதார வசதிகளை வழங்கி வருவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
முதற்கட்டமாக கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட கால்நடை நிலையங்கள் ஊடாக கால்நடை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், எதிர்பாரா குளிர் காலநிலையினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் இந்த விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். விவசாய அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இன்று ஆய்வக பரிசோதனைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து இன்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பேராதனை பிரதான காரியாலயத்தின் கால்நடை சுகாதார பிரிவின் கால்நடை வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் உயிரிழந்த விலங்கின் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
விலங்குகளின் மாதிரிகள் இன்றும் நாளையும் கன்னொருவை கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுக்கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நிலைமையை அடுத்து மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
விலங்குகளின் திடீர் மரணத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அரச தலைவர் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு நடவடிக்கைகள் உரிய முறையில் முடிவடைந்து அறிக்கைகள் வெளியிடப்படும் வரை மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.