31.3 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

விக்னேஸ்வரனின் தனி முடிவுகள்: தமிழ் மக்கள் கூட்டணிக்குள் சலசலப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களுடன், அதன் அதிருப்தியாளர்களால் பெரும் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

அந்த கூட்டணிக்குள் சுமுகமான நிலைமையில்லையென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

தமிழ் மக்கள் கூட்டணிக்குள் சுமுகமற்ற நிலைமை நீடிக்கிறது என்பதை தினமும் செய்திகளை வாசிக்கும் பொதுமக்களே ஊகித்தறியும் விதமான சம்பவங்கள் அண்மை நாட்களில் நடந்து வருகிறது.

அந்தவகையில், இறுதியாக நடந்த சம்பவம்- இந்த வார தொடக்கத்தில், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா வெளியிட்ட அறிக்கை.

அந்த அறிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், விக்னேஸ்வரனும் வீழும் அபாயமுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், அவ்வாறு நிகழ்ந்தால் அது தமிழ் மக்களிற்கு அழைக்கும் துரோகமாகும் என குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில்,

“கடந்த சில தினங்களில் ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எல்லாமே, ஒற்றையாட்சி முறைக்குள் அரசியல் தீர்வொன்றினை ஏற்படுத்தி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அதற்குள் முடக்குவதற்கு அவர் முனைந்து நிற்கின்றார் என்பதையே திட்டவட்டமாக எடுத்துக் காட்டுகின்றது.

ஜனாதிபதியின் அழைப்பிற்கு பச்சைக் கொடி காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்காமல் ஒதுங்கி நின்றதன் மூலம், அவரின் முயற்சிகளை அனுசரித்துச் செல்லும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளது. இதே வழியில் தான் விக்னேஸ்வரன் அவர்களின் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்திருக்கின்றது.

இவை எல்லாம், ஜனாதிபதியும் அவரின் தலைமையின் கீழ் உள்ள பொது ஜன பெரமுன அரசாங்கமும் விரித்திருக்கும் அரசியல் தந்திர வலைக்கள் இந்தக் கட்சிகள் விழுந்து விடுமா என்ற விசனத்தையே தோற்றுவித்திருக்கின்றது…“ எனத் தெரிவித்திருந்தார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்பதை கூட்டமைப்பும், விக்னேஸ்வரனும் தவிர்த்திருந்தனர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வு பற்றிய பேச்சுக்கு தயாரென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பிற்கு நல்லெண்ண சமிக்ஞையாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மற்றும்படி, இந்த வரவு செலவு திட்டம் எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டியது. எமது எம்.பிக்கள் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இருந்தனர் என கூட்டமைப்பின் தரப்பில் எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்திருந்தார்.

எனினும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் உள்ளிட்ட உயர்மட்ட கலந்துரையாடல்களில் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே தெரிவித்திருந்தார்.

ஏனைய பெரும்பாலானவர்கள் வாக்களிப்பை தவிர்க்கவே விரும்பினர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் வாக்களிக்கை தவிர்க்க விரும்பியதாலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டது. அதற்கு சுமந்திரன் ஒரு அழகான அரிதாரம் பூசியிருந்தார்.

ஆனால், தமிழ் மக்கள் கூட்டணியின் கதை வேறு.

விக்னேஸ்வரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் நடந்த பாதுகாப்பு அமைச்சு மீதான வாக்கெடுப்பை எதிர்ப்பார் என கூறப்பட்ட போதிலும், அதிலும் கலந்து கொள்ளவில்லை.

அவர் வாக்களிப்பை தவிர்த்தது பற்றி என்.சிறிகாந்தா காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது அறிக்கையின்படி, விக்னேஸ்வரனின் முடிவு பற்றி கூட்டணிக்குள் கலந்துரையாடப்படவில்லையென்பது தெரிந்தது.

தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத தமிழ் மக்கள் கூட்டணியின் பிரமுகர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களிற்கு மேலாக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துரையாடியிருக்கவில்லை. முக்கியமான தருணங்களில் விக்னேஸ்வரன் யாருடனும் கலந்துரையாடாமல் செயற்படுகிறார். ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பிலும் தன்னிச்சையாக நடந்தார். வரவு செலவு திட்டத்திலும் தன்னிச்சையாக நடந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் என்னவிதமான தவறுகள் உள்ளதென சுட்டிக்காட்டி வெளியேறியிருந்தோமோ, அதே நிலைமைதான் தற்போது எமது கூட்டணியிலும் உள்ளது.

அங்கே சம்பந்தன். இங்கே விக்னேஸ்வரன். ஆட்கள்தான் வித்தியாசம். நிலைமை ஒன்றுதான். ஏன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினோம் என சில பிரமுகர்கள் உள்ளக கலந்துரையாடல்களில் கவலை தெரிவிக்கும் அளவிற்கு நிலைமைகள் உள்ளன“ என்றார்.

இந்த நிலைமைகள் தொடர்பில் தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவித்த க.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணிக்குள் பிளவுகள் இல்லையென மறுத்தார்.

“ஒவ்வொரு விடயங்களிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் இருக்கும். ஆனால் நாம் ஒன்றாக கூடிப்பேசி, பொது இணக்கப்பாட்டுன் அடிப்படையில் பணியாற்றுகிறோம்“ என தெரிவித்தார்.

இருந்தாலும், கூட்டணியின் தலைவர்கள் கடந்த 2 மாதங்களிற்கு மேலாக நேரில் கலந்துரையாடியிருக்கவில்லையென்பதையும் ஏற்றுக்கொண்டார்.

“ஆனால் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு பற்றி கூட்டணிக்குள் கலந்துரையாடினேன். எனது நிலைப்பாட்டை தெரிவித்து அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் அனு்பினேன். எதிர்த்து வாக்களித்து ஜனாதிபதியை வீழ்த்தக்கூடாது. தற்போது பொருளாதார நெருக்கடியான கட்டத்தில் நாட்டை அவராலேயே நிர்வகிக்க முடியும் என்ற எனது அப்பிராயத்தையும் தெரிவித்தேன். ஆனால் என்ன முடிவெடுக்கப் போகிறேன் என்பதை குறிப்பிடவில்லை“ என்றார்.

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியிலேயே அனந்தி உள்ளிட்ட சிலரும் இருந்தனர். பின்னர் அவர்கள் யாரும் இலங்கையில் இருப்பதாவே தெரியவில்லை. அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட கடைசிக்காலகட்டத்தில் அனந்தியும் விக்னேஸ்வரன் தொடர்பான அதிருப்தியை நெருங்கியவர்களிடம் வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்து, கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தரப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்களையும் இணைத்து, புதிய கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பான முயற்சி ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தமிழ் மக்கள் கூட்டணிலுள்ள பல  பிரமுகர்களும் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அது சாத்தியப்படா விட்டால், ஒரு வேளை இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து தேர்தலில் போட்டியிட்டால், ஏனைய தமிழ் தரப்புக்களையும் இணைத்துக் கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு என செயற்படலாமென அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விக்னேஸ்வரன் மீதான அதிருப்தியே இந்த நிலைமைக்கு காரணமென அறிய முடிகிறது.

தமிழ் மக்கள் கூட்டணியின் தற்போதைய அமைப்பு முறை தமக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லையென தமிழ் மக்கள் கூட்டணியிலுள்ளவர்களும், கட்சியிலுள்ள பல பிரமுகர்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்கயில் தமிழ்பக்கத்திடம் வெளிப்படுத்தியிருந்தனர்.

விக்னேஸ்வரன் முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பவர், மற்றவர்களுடன் கலந்துரையாடுவதில்லையென்பது அவர் அரசியலுக்கு வந்த போதே வெளிப்பட்டிருந்தது.

9 வருடங்களின் பின்னரும் அந்த நிலைமை தொடர்வதால், தற்போது, தமிழ் மக்கள் கூட்டணி அபாய கட்டத்தில் உள்ளது. அதன் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நம்பிக்கையிழந்து, அதிருப்தியுடனுள்ளனர். அனேகமாக, தமிழ் மக்கள் கூட்டணியில் சில பிளவுகள் தோன்றலாமென ஊகிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment