உடையார்கட்டு பிரதேச நினைவேந்தல் கட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு பிரதேச மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் உடையார் கட்டு பிரதான வீதியருகில் ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நேற்று (18) காலை 10:30மணிக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரினை கரும்புலி புலிகளின் தாயாரான மரியாய் அவர்களும், நான்கு மாவீரர்களின் தாயாரும் எல்லைப்படை வீராங்கனையுமான ஜோசப் முணியம்மாவும் இணைந்து ஏற்றிவைத்தனர்
தொடர்ந்து ஈகைச்சுடரினை உடையார்கட்டு மண்ணின் முதல் மாவீரன் வீரவேங்கை கபில் அவர்களின் தந்தையார் சுப்பிரமணியம் ஜயா அவர்களும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி மக்கள் எழுச்சி இயக்கத்தின் பிரதம இணைப்பாளர் வேலன் சுவாமிகள், வடகிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் லவக்குமார், மற்றும் சமூக செயற்பாட்டாளர் கவிதா ஆகியோரும் இணைந்து ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், உடையார்கட்டு பிரதேச வர்த்தக சங்க பிரதிநிதிகள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் பொதுமக்கள் என ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தனர்.
மலர்வனக்கத்தினை மாவீரர் வீரவேங்கை கனிக்கொடி அவர்களின் தாயாரும் உடையார்கட்டு கிழக்கு மாதர் சங்கத்தின் தலைவியுமான பத்மலோஜினி அம்மா ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து மாவீரன் மாறனின் சகோதரன் வர்த்தக பிரதிநிதி சீலன், மாவீரனின் சகோதரன் வர்த்தக பிரதிநிதி காண்டி அவர்களும் இணைந்து ஆரம்பித்ததுடன்
மாவீரர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
மாவீரர் நினைவுரைகளை மாவீரன் லெப்டினன் நந்தன் அவர்களின் தாயார் சேகர் அன்னாள் அவர்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி மக்கள் எழுச்சி இயக்கத்தின் பிரதம இணைப்பாளர் வேலன் சுவாமிகள், வடகிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் லவக்குமார் அவர்களும் நிகழ்த்தியதுடன் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கு பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் மதிய உணவும்,உடுதுணிகளும் வழங்கப்பட்டு நன்றியுரையுடன் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.