பண்டாரகம ஹங்கமுவ கனிஷ்ட வித்தியாலத்தின் மாணவர்கள் மூவர் பாடசாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டதுடன், மின்சாரம் பாய்ச்சி விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (8) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரசபையின் அறிவித்தலுக்கு அமைய இந்த ஐந்து பேரும் இன்று (8) காலை ஆஜராகியுள்ளனர்.
சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அதிபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பிரதி அதிபர் மற்றும் பொலிஸ் ஜீப்பின் சாரதி (காவல்துறை கான்ஸ்டபிள்) பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரசபை குறிப்பிடுகிறது.
கடந்த 2ஆம் திகதி புதன்கிழமையே சிறுவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிபரின் அறிவிப்பின் பேரில் அங்கு வந்த மில்லனிய காவல்துறையைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள், மூன்று சிறுவர்களை பொலிஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சில இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்து, மின்சாரம் பாய்ச்சியது, ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
காயமடைந்த மூன்று மாணவர்கள் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் அதன் விசேட புலனாய்வு அதிகாரிகள் குழு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழு
விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.