எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அலெக்ஸாண்டிரியாவின் மேற்கில் உள்ள பண்டைய நகரமான டபோசிரிஸ் மாக்னாவில் உள்ள தபோசிரிஸ் மேக்னா கோயிலுக்கு அடியில் ஒரு பாறை சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்துள்ளனர்.
சுரங்கப்பாதை தரையில் இருந்து சுமார் 13 மீட்டர் ஆழத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது, அங்கு நாணயங்கள், தலை துண்டிக்கப்பட்ட சிலைகள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் உள்ளிட்ட பல கலைப்பொருட்கள் காணப்பட்டன.
கலாநிதி கேத்லீன் மார்டினெஸ் தலைமையிலான சான் டொமிங்கோ பல்கலைக்கழகத்தின் எகிப்திய டொமினிகன் தொல்பொருள் பணி, கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதையை ”வடிவியல் அதிசயம்” என்று குறிப்பிட்டது.
இந்த சுரங்கப்பாதை 1,305 மீட்டர் நீளமும், சுமார் 2 மீட்டர் உயரமும் கொண்டது என்று எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கலாநிதி மார்டினெஸ் இந்த சுரங்கப்பாதையின் கட்டடக்கலை வடிவமைப்பை கிரேக்கத்தின் ஜூபிலினோஸ் சுரங்கப்பாதையுடன் ஒப்பிட்டார். ஆனால் இது நீளமானது என்று அவர் கூறினார்.
இருப்பினும், தபோசிரிஸ் மேக்னா கோவிலின் சில பகுதிகள் மத்திய தரைக்கடல் நீரில் மூழ்கியுள்ளதும், பல ஆண்டுகளாக பல பூகம்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளதும் முழுமையான தொல்பொருள் ஆய்விற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கி.பி 320 -கி.பி1303 க்கு இடையில் எகிப்திய கடற்கரையில் குறைந்தது 23 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தபோசிரிஸ் மேக்னாகோவிலின் ஒரு பகுதி இடிந்து கடலில் மூழ்கியது. கலாநிதி மார்டினெஸ் தலைமையிலான அகழ்வாராய்ச்சியாளர்கள், முந்தைய அகழ்வுகளின் போது, ராணி கிளியோபாட்ரா, அலெக்சாண்டர் தி கிரேட் ஆகிய இருவரின் உருவங்கள் மற்றும் பெயர்களைக் கொண்ட நாணயங்கள் உட்பட பல முக்கியமான கலைப்பொருட்களை கோயிலுக்குள் கண்டுபிடித்திருந்தனர்.
ஒரு நேர்காணலின் போது, மார்டினெஸ், எகிப்திய ராணி கிளியோபாட்ரா மற்றும் அவரது காதலர் மார்க் ஆண்டனி ஆகியோரின் கல்லறைக்கு சுரங்கப்பாதை அவர்களை அழைத்துச் செல்லக்கூடும் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.
‘கிளியோபாட்ராவின் கல்லறைக்கு இது சரியான இடம்,’ என்று கூறினார். இந்த கண்டுபிடிப்பு ’21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கும்’ என்று கூறினார்.
‘எகிப்தின் கடைசி ராணி அங்கே புதைக்கப்படுவதற்கு ஒரு சதவீத வாய்ப்பு இருந்தால், அவரைத் தேடுவது எனது கடமை’ என்று கிளியோபாட்ராவின் கல்லறை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க பத்து ஆண்டுகளாக உழைக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் விளக்கினார்.
கி.மு 12ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காகப் போராடிய சீசரின் வாரிசான ஆக்டேவியனிடம் கிரேக்கத்தில் நடந்த போரில் தோல்வியடைந்த பின்னர் கிளியோபாட்ராவும் மார்க் ஆண்டனியும் இறந்தனர். இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் நம்புகிறார்கள், ஆனால் அவர்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
மார்டினெஸ், நேஷனல் ஜியோகிராஃபிக்கிற்கு அளித்த பேட்டியில், மார்க் ஆண்டனியை எகிப்தில் அடக்கம் செய்ய கிளியோபாட்ரா ஆக்டேவியனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எகிப்திய ராணி இது ஐசிஸ் மற்றும் ஒசைரிஸின் புராணக்கதையை மீண்டும் உருவாக்க விரும்பினார். ஒசைரிஸ் வழிபாட்டின் உண்மையான அர்த்தம் அது அழியாமையை அளிக்கிறது என்றார்.
அதனால் அவர்கள் இறந்த பிறகு, “தெய்வங்கள் கிளியோபாட்ராவை ஆண்டனியுடன் மற்றொரு வடிவத்தில் வாழ அனுமதிப்பார்கள், அதனால் அவர்கள் ஒன்றாக நித்திய வாழ்வைப் பெறுவார்கள்” என்று மார்டினெஸ் கூறினார்.
பண்டைய எகிப்திய பாதாள உலகக் கடவுளான ஒசைரிஸ் மற்றும் அவரது மனைவி எகிப்திய தெய்வம் ஐசிஸ் ஆகியோரின் நினைவாக தபோசிரிஸ் மேக்னா கோயில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லைவ் சயின்ஸின் கூற்றுப்படி, இந்த சுரங்கப்பாதை தொலமிக் காலகட்டத்திற்கு முந்தையது. கிமு 304 முதல் கிமு 30 வரை, எகிப்து அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவரிடமிருந்து வந்த மன்னர்களால் ஆளப்பட்டது.
முந்தைய அகழ்வாராய்ச்சி காலங்களில், கிளியோபாட்ரா மற்றும் அலெக்சாண்டர் இருவரின் உருவங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் உட்பட பல முக்கியமான கலைப்பொருட்களையும் குழு கண்டறிந்தது. கூடுதலாக, குழு பல தலை துண்டிக்கப்பட்ட சிலைகள் மற்றும் ஐசிஸ் தெய்வத்தின் சிலைகள் மற்றும் பல மட்பாண்ட பாத்திரங்களை நீருக்கடியில் மூழ்கியிருந்த சேற்று வண்டலில் கண்டெடுத்தது.