ஹங்கமுவ பிரதேசத்தில் பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவரின் பணப்பை காணாமல் போனதை அடுத்து, மாணவர்களை பொலிஸார் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
“பாடசாலை சிறார்கள் குற்றம் செய்யும் போது அவர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலையின் அதிகாரிகள் சுற்றறிக்கையை மீறினார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. விசாரணை அறிக்கைகள் சமர்பிக்கப்படும் போதே எம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும், விசாரணைகளின் முடிவுகள் சமர்ப்பிக்கப்படும் போது அது தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிவிப்பேன்” என அமைச்சர் கூறினார்.
முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஜகத் குமார ஆகியோர், பாடசாலை மாணவர்கள் குழுவொன்று பொலிஸாரால் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சபையில் தெரிவித்தனர்.



