மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களுக்கு பதில் தேட வேண்டும், ஆனால் அழுத்தங்களுக்கு எதிராக அடக்குமுறையை அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் பதில் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அனுர திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அடக்குமுறையின் மூலம் பதவி வகிக்கலாமென கற்பனை செய்த உலகத் தலைவர்கள் வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் வீழ்ந்துள்ளதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த பாராளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க,
குப்பைக்கூடைக்குள் வீழ்ந்த வரலாற்றை இலங்கை எதிர்பார்க்கவில்லை.
சோமாலியாவில் கப்பலை சிறைபிடித்த முரட்டுக் கும்பல் போன்றே இன்றைய அரசாங்கம் செயற்படுவதாகவும், போராட்டக்காரர்கள் மற்றும் பிக்குகளை தடுத்து வைக்கப்படுவதற்கான காரணத்தை கூற முடியுமா என்றும், மக்கள் எழுச்சியை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளாலும் நாடு உலகில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் புள்ளிவிபரங்கள் உண்மையான நிலைமையை மறைப்பதற்காகவே அமைந்துள்ளதாக திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த புள்ளிவிபரங்கள் உண்மையான நிலைமையை பிரதிபலிக்கவில்லை எனவும், அரசாங்கத்திடம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அதனால் பெரும் சமூக அமைதியின்மைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அனுர திஸாநாயக்க குறிப்பிட்டார்.



