ஹொரண மில்லனிய பிரதேச பாடசாலையொன்றின் 5ஆம் ஆண்டு மாணவர்கள் மூவரை பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்று, மின்சாரம் பாய்ச்சி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிபரின் முறைப்பாட்டையடுத்த, பாடசாலைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், அந்த மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று, மின்சாரம் பாய்ச்சி விசாரணை செய்ததாக பெற்றோரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மூன்று மாணவர்களும் கைவிலங்கிடப்பட்டு, பாடசாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர் ஒருவரின் உடலில் பல தீக்காயங்கள் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதய உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பெண் ஆசிரியை ஒருவரின் பணப்பை திருடப்பட்டதை தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணப்பை திருடப்பட்டதை தொடர்ந்து, பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு மாணவர்களான பன்னிரெண்டு மாணவர்களை, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சிலர், பாடசாலையின் நூலக அறையில் வைத்து, சம்பவம் குறித்து கேட்டு தாக்கியுள்ளனர்.
மாணவர்கள் முழந்தாளிட வைக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரினால், மில்லனிய பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸ் ஜீப்பில் மூன்று உத்தியோகத்தர்கள் அங்கு வந்தனர். மூன்று மாணவர்களை வாகனத்தில் ஏற்றி பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.



