இன்று (7) நடிகர் கமல் ஹாசனுக்கு 68வது பிறந்தநாள். நடிப்பு, அரசியல், இடையில் கொஞ்சம் பிக்பாஸ், இதர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வெவ்வேறு துறைகளில் உலாவரும் கமல் சமீப காலங்களில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் உள்ளார். ஆனாலும் நவம்பர் 7 என்றால் கமல் பிறந்தநாளில் ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள்.
இதுதவிர இன்று மற்றொரு நட்சத்திரத்துக்கும் பிறந்தநாள்.
தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்தியத் திரையுலகையே தனது நடிப்பாற்றல் மற்றும் நடனம் மூலம் கவர்ந்த நடிகை அனுஷ்காவுக்கு இன்று 41 வயது பிறக்கவுள்ளது. ருவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அனுஷ்காவின் பிறந்தநாளை இன்றே நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு மணிக்கணக்கில் கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது.
அனுஷ்காவுக்கு எதனால் ரசிகர்களிடையே இவ்வளவு வரவேற்பு என அவர் வாழ்க்கையை சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் தெரியும்.
ஸ்வீட்டி ஷெட்டி என்கிற இயற்பெயர் கொண்ட அனுஷ்கா மெங்களூரில் துளு பேசும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பிசிஏ பட்டதாரியான அவர், யோகா ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வாழ்க்கையில் முன்னேற 21 வயதிலேயே பல வாய்ப்புகளைத் தேடி அலைந்தார். இதன்பலனாக 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவின் சூப்பர் திரைப்படத்தில் இயக்குநர் பூரி ஜகன்நாத்தால் சிறிய வேடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஆறடி உயரம், வெள்ளை நிறம் கொண்ட அனுஷ்கா, தனது ஒல்லியான உடல்வாகு காரணமாக தெலுங்குத் திரைத் துறையில் பல ஆரம்ப நிராகரிப்புகளைச் சந்தித்தார்.
அனுஷ்கா இரண்டாம் நாயகி வேடங்கள் ஏற்று பல படங்களில் நடித்தபோதும் அவருக்கு திரைத்துறையில் திருப்புமுனை அளித்த பெருமைதமிழ் இயக்குநர் முருகதாஸை சேரும்.
தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, அனுஷ்கா உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய அரசியல் படம் ஸ்டாலின். வசூலில் சாதனை படைத்த இப்படம் அதிகம் பேசப்பட்டது. இதனையடுத்து அனுஷ்காவின் திரைவாழ்க்கை உச்சத்துக்குச் சென்றது.
ஒருபக்கம் தெலுங்கில் பில்லா, கலேஜா, அருந்ததி, சைஸ் ஜீரோ, ருத்ரமாதேவி என அனுஷ்கா அறுவடை செய்துகொண்டிருக்க, மறுபுறம் தமிழில் சிங்கம் சீரீஸ், தெய்வத்திருமகள், தாண்டவம், இரண்டாம் உலகம், என்னை அறிந்தால், லிங்கா என 2009-2017 ஆண்டு காலகட்டத்தை தென்னிந்தியத் திரையுலகின் ‘அனுஷ்கா’ காலமாக மாற்றினார்.
இவரது லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு மகுடம் சூட்டியதுபோல அமைந்தது ராஜமவுலியின் பாகுபலி படத்தில் இவர் ஏற்ற தேவசேனா கதாப்பாத்திரம். மகிழ்மதி ராஜ்ஜியத்தின் இளவரசிக்கான தோற்றம், கம்பீரம், அழகு, உயரம் கொண்ட அனுஷ்கா, அந்தக் கதாப்பாத்திரத்துக்கு மேலும் அழகு சேர்த்தார்.
தென்னிந்தியாவின் அதிக சம்பளம் பெரும் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
இன்று சில ஓடிடி வெப் சீரீஸ்களிலும் நடித்துவரும் அனுஷ்காவுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இன்று முதல் அவருக்கு 41 வயது என்றால், நம்ப முடிகிறதா?



